சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா? (ஜெயஸ்ரீ சாரநாதன் ) – 1

12

திராவிடவாதிகள் பரப்பி வரும் பார்ப்பனக் கருத்துக்களுக்கு ஆதாரமில்லை என்பதைத் தொல்காப்பியச் சூத்திரம் மூலமாக கண்டோம். அதுபோல பார்ப்பனர்கள் மட்டுமே படிப்பாளிகளாக இருந்தார்கள் என்று பரப்பப்பட்டு வரும் கருத்தும் தவறு என்பதையும், யாரும், யாருக்கும் கல்வியை மறுக்கவில்லை என்பதையும் தமிழ்ச் சங்க நூல்கள் வாயிலாகவே பார்ப்போம்.

பார்ப்பனர்கள் கற்றலும், கற்பித்தலும் செய்தார்கள். அந்தக் கல்வி இரண்டு வகைப்பட்டது.

ஒன்று, வேதக் கல்வி, மற்றொன்று வேதம் ஒழிந்த கல்வி.  அதாவது, வேதமோதுதல் அல்லாத  பிற கல்வி என்று இரு வகைகளாக இருந்தன.

அந்தக் கல்வியை தமிழிலும் படிக்கலாம், சமஸ்க்ருதத்திலும்                  படிக்கலாம் என்று இருந்தது என்பதை ”அறுவகைப்பட்ட பார்ப்பன இயல்”      என்று தொல்காப்பியர் சூத்திரமாக எழுதியிருக்கிறார். அவற்றுள் முதல்      இரண்டு வகை வேதக் கல்வியாகும், கடைசி ஆறு வேதம் ஒழிந்த     கல்வியாகும். 

பார்ப்பனர்கள் உட்பட அனைத்து வர்ணத்தவர்களும் அவரவர்கள் விருப்பம், முயற்சி, ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கல்வியைக் கற்றிருக்கிறார்கள்.

நான்காம் வர்ணத்தவர் எனப்படும் வேளாண் மக்களும் கல்வியைக் கற்றிருக்கிறார்கள். (நான்காம் வர்ணத்தவரைச் சூத்திரன் என்று தமிழில் சொல்லவில்லை. அவர்களை வேளாண் மக்கள் என்றே சொன்னார்கள்.)

வேளாண் மக்களுக்கான ஆறு தொழில்கள் என்று சொல்லும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் ஆறில் ஒன்றாக இதைக் கூறுகிறார்.

உழவு – உழவொழிந்த தொழில் – விருந்தோம்பல் – பகடு புறந்தருதல் (ஏரைப் பாதுகாத்தல்) வழிபாடு – வேதம் ஒழிந்த கல்வி.

அரசர், வணிகர் ஆகியோருக்குச் சொல்கையில் ஓதல் என்று பொதுவாகச் சொல்கிறார். அந்த ஓதல் வேதக் கல்வியாகவும், இருக்கலாம், அல்லது வேதம் ஒழிந்த கல்வியாகவும் இருக்கலாம். ஆனால் வேளாண் மக்களுக்குக் குறிப்பாக வேதம் ஒழிந்த கல்வி என்று சொன்னதற்குக் காரணம் இருக்கிறது.

அவரவர் இயல்பு அடிப்படையில் வர்ணம் அமைகிறது. வேளாண் வகையின் முக்கிய இயல்பு பகடு புறந்தருதல் ஆகும். இந்த உலகமே வேளான் மக்களின் பகடு புறந்தரும் இயல்பை நம்பித்தான் இயங்குகிறது.

  • அப்படிப்பட்ட அவன் மண்ணிலும், சேற்றிலும் இறங்கி வேலை செய்யவும் வேண்டும், வேதக் கல்வி கற்றுக் கொள்ள வேண்டி பட்டினியும், விரதமும் இருந்து, வேளைக்கு ஒரு குளியலும் செய்து மந்திரம் ஓத வேண்டும் என்றால் எப்படி முடியும்?
  • வேதக் கல்வி விடியலுக்கு முன்னால் ஆரம்பிக்கும். வேளாண் வர்ணத்தவனும் விடியலுக்கு முன்னால் வயலுக்குச் செல்ல வேண்டும். அவன் வேதக் கல்வி படித்தான் என்றால் எதற்குச் செல்வான்? எதற்கு முன்னுரிமை தர முடியும்?

1

இந்த நேரப் பிரச்சினை அரசர், வணிகர் ஆகிய மீதமுள்ள வர்ணத்தவருக்குக் கிடையாது. அதனால் அவர்களுக்கு ஓதல் என்பதில் வேதக் கல்வியும், வேதம் ஒழிந்த கல்வியும் சேர்த்தே சொல்லப்பட்டது.

மேலும், வேளாண் மக்களை ஒரு சொத்தாகக் கருதினார்கள். தொல்காப்பியப் புறத்திணைச் சூத்திரங்களை விளக்கும் புறப்பொருள் வெண்பாமாலையில், பாலைக் குரிய வாகைத் திணையில், வேளாண் வகையைச் சொல்லும் சூத்திரம்165 –இல் ‘உழுவான் உலகுக்கு உயிர் என்று அந்த நான்காம் வர்ணத்தவரை உலகத்துக்கே உயிர் போன்றவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

திருவள்ளுவரும் அவர்களது சிறப்பைத் தனியாக விவரித்துள்ளார். எனினும் சிறப்புப்பாயிரத்தில், இந்த ஒரு வர்ணத்தவரைப் பற்றி மட்டுமே குறிப்பாகச் சிறப்பித்துச் சொல்லியுள்ளார். வேறு எந்த வர்ணத்தவரைப் பற்றியும் சொல்லவில்லை.

அறவாழி அந்தணன் என்று சொன்ன இடத்திலும் (கடவுள் வாழ்த்து 8), ஆண்டவனைத்தான் சொன்னாரே தவிர, அந்தண வர்ணத்தைச் சொல்ல்வில்லை. ஆனால் பகடு புறந்தருதல் என்னும் அந்த ஏரைக் காக்க வானம் பொழிய வேண்டும் என்று இந்த ஒரு வர்ணத்துக்கு மட்டுமே (வான் சிறப்பு -4) பாயிரத்தில் இடம் தந்துள்ளார்,

நான்காம் வர்ணத்தவர், உலகத்துக்கும், தாங்கள் வாழ்ந்த நாட்டுக்கும் ஆதாரமாகக் கருதப்பட்டார்கள். அரசர்கள் படையெடுத்து பிற நாட்டைக் கொண்டாலும், அந்தப் படையெடுப்பினால் அந்த நாட்டு வேளான் மக்களுக்கு ஒரு துன்பமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள். கழனிகள் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டார்கள். இதைச் சொல்லும் ஒரு பாடல் புறநானூற்றில் இருக்கிறது.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் செய்த செயல்கள் என்று வெள்ளைக் குடி நாகனார் சொல்பவற்றில் முத்தாய்ப்பாகச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ’பகடு புறந்தருநர் பாரமோம்பி’ என்பதேயாகும் (பு-நா-35)

அந்த அரசன் எத்தனையோ வெற்றிகளைப் பெற்றவன். ஆனால் அவையெல்லாம் பெரிதல்ல. அந்த அரசனை உலகம் தூற்றக்கூடிய காலமும் வரும். மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் போனாலும், விளைச்சல் குறைந்தாலும், இயல்பல்லாதன மக்கள் தொழிலில் தோன்றினாலும், உலகம் அரசனைத்தான் பழிக்கும். எனவே ஏரைப் பாதுகாப்பவரது குடியைப் பாதுகாத்து, அதனால் ஏனைய குடிகளையும் இந்த அரசன் பாதுகாக்கிறான் என்பதால், அவன் பகைவர்களும் அவனை வணங்குவர் என்கிறார் புலவர்.

2

இந்தச் செய்யுளையே தொல்காப்பியச் சூத்திரம் செய்யுளியல் 128 –க்கு விளக்கமாகக் கூறும் நச்சினார்க்கினியார், பகைவர் நாட்டை வென்றாலும், வெல்லப்பட்ட பகைவர்கள் இந்த அரசனைப் புகழ்வார்கள். ஏனெனெறால் வெல்லப்பட்ட நாட்டு வேளான் மக்களுக்கு இந்த அரசனால் எந்தத் துன்பமும் வராது. வென்ற நாட்டு கழனிகளுக்கும் எந்த அழிவும் வராது. ஏனெனில் வேளாண் மக்களைப் பாதுகாத்தால்தான், உணவும், செல்வமும் பெருகும். அதனால் மற்ற வர்ணத்தவரும் கவலையின்றி வாழ முடியும்.

இவ்வாறு சொல்லப்பட்டது கிள்ளி வளவனுடைய இயல்பு மட்டுமல்ல. இது தான் அரச வர்ணத்தின் ஐவகை மரபில் ஒன்று.

உலகத்துக்கு உயிராக விளங்கும் நான்காம் வர்ணத்தவருக்கு அவர்கள் செய்து வந்த தொழிலுக்குத் தலை வணங்கியே வேதக் கல்வி தேவையில்லை என்று வைத்தார்கள். காழ்ப்புணர்ச்சியாலோ, அடக்கு முறையாகவோ வேதக்கல்வியை மறுக்கவில்லை

நடைமுறைக்கு ஒத்து வராது (NOT PRACTICAL) என்றே அவ்வாறு வைத்தார்கள்.

ஆயினும், கல்வியே வேண்டாம் என்று சொல்லவில்லை, வேதம் ஒழிந்த கல்வி என்பதை ஒரு தொழிலாக வைத்தார்கள். அந்தக் கல்வி அவர்கள் கற்பனைக்கும், அறிவுக்கும் தீனி போடக் கூடியது. அதனால் அவர்கள் பாடும் ஏர்ப்பாட்டும், ஏற்றப்பாட்டும் அவர்கள் செய்யும் உழவின் சுமையைத் தவிர்க்கும்படி அமைந்தது.

இவையெல்லாம் மனுவாதி வர்ணாஸ்ரமத்தில், இந்த அளவுக்கு              விரிவாகச் சொல்லப்படவில்லை.

மனுவாதியில் நான்காம் வர்ணமே முதலில் ஏற்படவில்லை. காலப்போக்கில் அது ஏற்பட்ட பிறகும், தமிழில் சொல்லியுள்ளது போல அத்தனை விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் தமிழ் மரபில் இந்த வர்ண விவரங்கள் இருந்து வந்தன என்பதுதான் உண்மை என்று பறை சாற்றும் வண்ணம், ‘என்மனார் புலவர்’ என்று நொடிக்கொரு தடவை தொல்காப்பியர் எழுதி, இந்தக் கருத்துக்களை வைத்துள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இயல்பையும், சூழ்நிலையையும் பொருத்து, அவற்றைக் கவனித்து, பெரியோர்கள் சொல்லி வந்ததை, வழி வழியாகக் கடை பிடித்து வந்தனர் என்பதே இந்த என்மனார் புலவர் என்று தொல்காப்பியர் கை காட்டி விடும் சங்கதியாகும்.

இனி நான்காம் வர்ணத்தவர் கல்வியைப் பெற்றார்கள் என்று காட்டும் சங்க நூல் ஆதாரங்களைப் பார்ப்போம்.

தமிழ் நிலங்களில் நாலாம் வர்ணத்தவரான வேளாண் மக்களை அடக்கியோ, ஒடுக்கியோ இழிவு படுத்தியோ நடத்தவில்லை என்பதற்குத் திருக்குறளின் உழவு அதிகாரமே சான்று.  வேளாண் மக்களே அச்சாணி என்றும்,

  • உலகுக்குத் தலை போன்றவர்கள் என்றும் கருதப்பட்டனர்.
  • இவர்களே அரசர்களுக்குச்செல்வத்தைப் பெருக்கிக் கொடுத்தனர்.
  • இவர்கள் இல்லையென்றால் தவ முனிவர்கள் கூட தவித்து விடுவார்கள்.
  • இவர்கள்தான் உண்மையில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் என்று சொல்லக்கூடிய தகுதியுடன் இருப்பவர்கள்.

மற்றவர்கள் எல்லாம் ‘தொழுதுண்டு’ இவர்களுக்குப் பின் செல்பவர்கள் என்றெல்லாம் பலபடியாகத் திருக்குறள் கூறுவது, இந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உயர்வைப் பறை சாற்றுகிறது.

3

இவர்கள் யாரிடமும் கை நீட்டினதில்லை என்கிறது திருக்குறள்.

ஆனால் இவர்களிடம் மற்றவர்கள் கை நீட்டிப் பெற்றனர்.

அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர் என்பது உண்மையே என்பதை

நச்சினார்க்கினியர்    சொல்லும்     நாலாம்       வர்ணத்தவருக்கான          ஆறு தொழில்களுள் ”விருந்தோம்பல்” ஒன்று என்பதன் மூலம் தெரிகிறது.         (பகுதி-62)

வேறு எந்த வர்ணாத்தவருக்கும் விருந்தோம்பல் சொல்லப்படவில்லை.

ஆனால் நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் அது சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஒருவனுடைய பசியாற்றுகிற திறமை இந்த வர்ணத்தவருக்குத் தான் உண்டு. வீட்டுக்கு வருபவர்களுக்கு இல்லை என்று உணவு கொடுப்பவர்கள் இவர்கள். அப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள் என்றால்

அவர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்றோ, தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ இந்த வர்ண முறை அவர்களைப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது.

இந்தத் தமிழ் மண்ணில் அரசர்கள் கோலோச்சிய வரையிலும், அவர்களுக்கு நல்ல அந்தஸ்து இருந்தது. தமிழ் அரசர்கள் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் படையெடுத்தாலும் அப்பொழுதெல்லாம், வேளான் மக்களையும் ,அவர்கள் உழும் வயல்களையும் அவர்கள் தொந்திரவு  செய்ததில்லை வென்ற நாடுகளில் இருந்த மக்களையும், தங்கள் மக்களாக அரவணைத்து அவர்கள் மூலம் செல்வம் ஈட்டினர்.

4

ஆனால் அந்த நிலை ஒரு காலக்கட்டத்தில் மாறியது.

காபாற்ற வேண்டிய அரசன் காப்பாற்றவில்லை என்றால்

அப்பொழுது அவர்கள் வாழ்க்கை மாறி விடுகிறது.

அப்படிப்பட்ட காலம் எப்பொழுது, ஏன் எழுந்தது என்பதை நாம் படித்து தெரி்ந்து கொள்ளவேண்டும்.

என்றைக்குமே யாருக்குமே அரசர்கள்தான் புரவலர்களாக      இருந்திருக்கிறார்கள்.

அந்த அரசர்கள் இயல்பு திரிந்த போது இந்த மக்களும் அவதியுற்றனர்.     இதற்கும்ப் பார்ப்பனனும் வர்ணமுறையும் காரணமில்லை.;

ஆட்சி நடத்தப்படும் விதமே இவர்கள் பெற்ற அவதிக்கு காரணமானது என்பதைப் புரிந்ததுக் கொள்ள, நம்மை ஆண்ட வெளிநாட்டாரை வைத்துச் சொல் முடியும். பாரதம் முழுவதும் இருந்த பல வேறு அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.

ஆனால் வென்ற நாடுகளில் இருந்த வேளாண் மக்களையும்அவர்கள் செல்வமான கழனிகளையும் அழிக்கக் கூடாது என்பதை ஒரு தர்மமாகக் கொண்டிருந்தார்கள்.

அந்தத் தர்மம் படையெடுத்து வந்த முஸ்லீம் அரசர்களுக்கு இல்லை.

அவர்களுக்குப் பின் நம்மை அடிமைப் படுத்திய ஆங்கிலேயனுக்கும் இல்லை.

நம்மை அழித்து, நம் சொத்தைத் தங்கள் ஊருக்கோ,

அல்லது தங்கள் அரசர்களுக்கோ கொடுக்க வேண்டும் என்பதுதான்

அவர்களது தர்மமாக இருந்தது.

நம்மிடம் இருந்தவற்றை அபகரித்தவர்கள் அவர்கள். அதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்குள் முக்கியமமானவர்கள் இந்த வேளாண் மக்கள்.  அந்த பாதிப்பின் காரணத்தை அறியாமல், பார்ப்பனர்களையும், வர்ண முறையையும் அதற்குக் காரணமாக்கும் திராவிடவாதம்,

அகில உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரான நொபோரு கராஷிமா அவர்கள், இந்த திராவிட இயக்கம் சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.  ஆனால் இந்த இயக்கம் அறிவுக்கு புறம்பானதாகவே இருக்கிறது.

5

வேளாண் மக்களும், கல்வியும்.

வணங்கப் படத்தக்கவர்களான நாலாம் வர்ணத்தவர்களுக்கு, கல்வி மறுக்கப்படவில்லை. வேதமொழிந்த கல்வியை அவர்கள் படிக்க வேண்டும் என்பது அவர்களுக்கான ஆறு தொழில்களுக்குள் ஒன்றாக இருந்தது. அந்த கல்வி பெறுவதில் தடை இல்லை.

பழமொழி 116 –இல்

ஆற்றவும் கற்றார் அறிவுடையார், அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை,

அந்நாடு வேற்று நாடாகா, தமவேயாம்

அதனால் கல்லாமல் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுவதால், கல்வி கற்பதற்குத் தடை ஏதும் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது..

இந்தப் பழமொழிச் செய்யுள் மூலம், கற்றவர் பல நாடுகளுக்கும் சென்றனர் என்றும்,

அப்படிச் சென்ற நாடுகளெல்லாம் அவர்களுக்கு வேற்று நாடுகள் போல இல்லை என்றும்,

அந்த நாடுகள் அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிகிறது.

அவர்கள் கற்ற கல்வி, இன்றைய திராவிடவாதிகள் சொல்வதைப் போல மொழிப் புலமை அல்ல. அதாவது தமிழன், தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு இதுமட்டுமே கல்வி என்று இருக்கவில்லை. வெறும் தமிழ் மொழிப் புலமை மட்டுமே இருந்திருந்தால், அவர்களால் வெளி இடங்களுக்குச் சென்று அங்கு தங்களை இன்றியமையாதவர்களாக நிலை நாட்டிக் கொண்டிருக்க முடியாது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்லியிருப்பதால்

அறிவு சார்ந்த கல்வியாகவும்,

வாழ்கை முறை, தர்ம நிலை ஆகியவற்றைப் புகட்டும் கல்வியாகவும்

இருந்திருக்க வேண்டும். 

அதனால் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு அடைந்திருக்கிறார்கள்.

அறு வகைப்ப்பட்டப் பார்ப்பியலில் நான்கு வகைகள் இப்படிப்பட்ட கல்வியையும், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிப் புலமையையும் தருபவை.  அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டே அவர்கள் பெருமை பெற்றிருக்க முடியும்.

ஆனால் இவை எல்லாம் பொருள் ஈட்டும் முறையைச்  சொல்லித் தரும் கல்வி அல்ல.

பொருள் ஈட்டுவதற்கு, நாலாம் வர்ணத்தவருக்கு உழவு இருந்தது.  மூன்றாம் வர்ணத்தவருக்கு வாணிகம் இருந்தது. அரசர்களுக்கு ஐந்து வகை இருந்தது. ஐவகை மரபின் அரசியல் பக்கம் என்று தொல்காப்பியர் சொல்லுவது பின் வரும் ஐந்து வகைகளில் பொருள் சேர்ப்பதே என்று நச்சிநார்கினியர் சொல்கிறார்.

(1)  சுங்கம், வரி போன்ற வழிகள் மூலம் பொருளைப் பெருக்குதல்,

(2)  பகைவனை வென்று அவன் நாட்டிலிருக்கும் செல்வத்தை அடைதல்,

(3)  வாரிசு இல்லாமல் ஒருவர் இறந்து விட்டால், அவரது செல்வத்தைப் பெறுதல்,

(4)  பொருள் இல்லாத காலத்தில் வாணிபம் செய்து பொருள் தேடல்,

(5)  அறத்தில் திரிந்தாரைத் தண்டிக்கும் விதமாக அவரது பொருளைப் பெறுதல்

நான்கு வர்ணத்தவர்களில் பார்ப்பனர்களுக்குப் பொருள் சேர்க்கும் முறை சொல்லப்படவில்லை.  மாணவர்கள் தருவதையும், தானமாகப் பெருவதையும் வைத்துக் கொண்டே அவர்கள் வாழ்க்கை நடத்தினார்கள்.

அந்தப் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்த கல்வி பொருளாதாரக் கல்வி அல்ல. அது அறக்கல்வியாகும்.

அந்தக் கல்வியை நான்காம் வர்ணத்தவர்கள் பெற வேண்டும் என்பது அவர்களுக்கான வர்ண விதியான ஆறு தொழில்களில் ஒன்று.

அந்தக் கல்வி அவர்களுக்குப் பொருள் ஈட்டும் முறையைச் சொல்லித்தரவில்லை.

ஆனால் அந்தக் கல்வி அறிவைக் கண்டு பிறர் இவர்களுக்குப் பொருள் தந்தனர்.

எங்கோ கிராமப்புறத்தில் இருக்கும் பாணர்கள் அப்படிப்பட்ட கல்வியால்        பெற்ற கவி இயற்றும் திறமையால் அரசர்களிடடமிருந்து பொருள் ஈட்டினர்.   எந்த அரசன் வாரிக்கொடுக்கும் வள்ளலாக இருந்தானோ, அவனைத் தேடி      நாடு விட்டு நாடு சென்று, பாடிப் பரிசில்கள் பெற்றிருக்கின்றனர்.

அப்படி அவர்கள் பாடின பாடல்களில், உலக அறிவும், அறநூல்கள் அறிவும் மிகுந்து இருப்பதைச் சங்க நூல்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்கிறோம்.

(தொடரும்)

About Author :- Jayasree Saranathan. Dr Jayasree Saranathan is a researcher, writer and astrologer with a PhD in Astrology. Her research areas include Indology, Hindu Epics, …  visit jayashreesaranathan.blogspot.com

பின்னூட்டமொன்றை இடுக