சூத்திரன் வேதம் படிக்கக்கூடாதா? (ஜெயஸ்ரீ சாரநாதன் ) – 2

வேதமொழிந்த கல்வி.

ஆறு பார்ப்பியலில், 4 வகைகளில் வரும் வேதமொழிந்த கல்வி என்பது, அறநூல்கள் சொல்லும் அறக் கல்வி ஆகும்.

அந்தணர்கள் மற்ற வர்ணத்தவருடன் போட்டிக்கு வந்ததில்லை.. அப்படியே போட்டியிட்டுருந்தால், சங்க நூல்களில் அந்தணர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கும்

ஆனால் சங்க நூல்களில் அந்தணர்கள் எழுதிய பாடல்கள் குறைவு.  அவர்கள் வேதம் ஓதுதலிலும், கற்பித்தலுமே காலத்தைக் கழித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள், தங்கள் பெயரை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்களுக்கு ஒரு ஏணியாகத்தான் தமிழைப் பார்ப்பனன் இருந்திருக்கிறான்.

அற வழிக் கல்வி என்பது அறம், பொருள், இன்பம் என்னும் புருஷார்த்தங்களைக் கொண்டது..

அறம், பொருள், இன்பம் என்றால் என்ன?

ஒருவன் நடந்து கொள்ளும் விதம் அறவழியில் இருக்க வேண்டும்.

பொருள் ஈட்டுவது அறவழியில் இருக்க  வேண்டும்.

இன்பம் நுகர்வதும் அறவழியில் இருக்க வேண்டும்,

இப்படி இருந்தால் வீடு பேறு கிடைக்கும்.

அதனால் அறம், பொருள் இன்பத்தை ஒருவன் ஒழுகாகப் பேண வேண்டும்.

இது வேதக் கருத்து.

இதுவே திருக்குறள் முதல் புறநானூறு உள்ளிட்ட அனைத்து சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் புறநானூறு என்பதே அறநிலை, பொருள்நிலை, இன்ப நிலை என்று மூன்று பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்பது டா.உ.வே.சா அவர்களது கருத்து. ,

ஆகவே அறம், பொருள், இன்பம் என்னும் வேத மதக் கருத்தே, தமிழர் பண்பாட்டுக் கருத்து ஆகும். அதை மனுவாதிகளும் பின்பற்றினார்கள் என்பதால், தமிழன் அதை வட இந்தியாவில் புகுத்தினான் என்று சொல்வது சரியல்ல என்பது போலவே, மனுவும் தமிழ் மக்கள் மீது அதைத் திணித்தான் என்று சொல்லுவதும் சரியல்ல.வேதத்தை எல்லோரும் பேணி வந்தனர். அதனால் அது தரும் வாழ்க்கையியலும் இமையமலை முதல் தென் குமரி வரை பொதுவாக இருந்திருக்கிறது.

அதைத்தான் கல்வியாகத் தமிழன் கற்றான் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

அது நான்காம் வர்ணத்தவருக்கு மறுக்கப்படவில்லை என்பதற்கு ஒரு சான்று புறநானூற்றில் இருக்கிறது.

”வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே” (புநா-183)

அதாவது நான்கு பால் என்று நான்கு வர்ணங்கள் இருந்திருக்கின்றன.

அவற்றுள் மேல்பால், கீழ்ப்பால் என்பது மேலிலிருந்து கீழாக எண்ணுவதால் ஏற்படுவது. கீழ்ப்பால் என்னும் நான்காவது பாலைச் சேர்ந்த ஒருவன் கல்வியில் தேர்ச்சி பெற்றால் அவனிடம், மேற்பாலாக உள்ள முதல் மூன்று வர்ணங்கள் ஒன்றில் பிறந்தவனாக இருந்தாலும், ஒருவன் தலை வணங்கி அவன் சொன்னதற்குக் கட்டுப்படுவான்.

இதில் குதர்க்கம் கண்டுபிடிப்பவர்கள், கீழ்ப்பால் ஒருவன் கற்பின் என்று ஒருவன் கற்றுக் கொண்டால் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அத்தி பூத்தாற்போல ஏதோ சிலரே கற்றிருக்க வேண்டும் என்று சொல்லலாம். அது சரியல்ல என்று தெரிந்து கொள்ள அந்தப் பாடல் சொல்லும் கருத்து முழுவதையும் தெரிந்து கொள்வது நல்லது.

அந்தப் பாடல், கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதற்காக ஒரே வகையில் உள்ளவர்களுக்குள் கல்வியால் பேதம் ஏற்படும் என்று உதாரணங்களைச் சொல்கிறது.

அப்படிச் சொல்வது – ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும், கல்வி கற்ற மகனிடம் அந்தத் தாய்க்கும் மனம் செல்லும். 

அது போல ஒரே குடியில் பலர் பிறந்திருந்தாலும், அவர்களுள் மூத்தவனை வருக வருக என்று அழைக்காமல், இளையவனாக இருந்தாலும், கற்றவன் எவனோ அவன் பின்னால் அரசனும் செல்வான். 

அதே போல வேற்றுமைகள் இருக்கும் நான்கு வர்ணத்தவர்களில், கடைசி வர்ணத்தவன் கற்றவன் என்றால், அவனுக்கு முன்னால் இருக்கும் மூன்று வர்ணதவர்களும் அவனிடம் கட்டுப்படுவார்கள்.

இந்தக் காரணங்களினால், உதவி செய்தோ, பொருள் கொடுத்தோ எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்கிறது இந்தச் செய்யுள்.

இதில் வேற்றுமை தெரிந்த நாற்பால் என்று சொல்லி, அவர்களுள் கீழ்ப்பால் கல்வி கற்றலைப் பற்றிச் சொல்லவே, அந்த வேற்றுமை என்பது கல்வியினால் ஏற்பட்ட வேற்றுமை அல்ல என்பது தெளிவாகிறது. பிற வழிகளில் அந்த வேற்றுமை இருந்திருக்கிறது. அந்த வேற்றுமைகள் கல்வி கற்பதற்குத் தடையாக இல்லை என்றும் தெளிவாகிறது.

இந்தச் செய்யுளை எழுதியவர் ஒரு பாண்டிய அரசர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் ஆரியபடைகடந்த நெடுஞ்செழியன் ஆவார்.

இந்த அரசன், கோவலன் சாவுக்குக் காரணமாகி, தான் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்த கணமே அரியணையில் உயிரை விட்ட நெடுஞ்செழியனாவான் என்பதை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தின் இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.

8

அவன் ஆரிய வர்த்தம் என்று விந்திய மலைக்கு வடக்கே இருந்த இடங்களுக்குச் சென்று அங்கிருந்த அரசர்களை வென்றிருக்கிறான் என்பதை ஆரியப்படை கடந்தவன் என்ற சிறப்புப் பெயர் மூலம் தெரிந்துக் கொள்கிறோம்.

வெறுக்கப்பட வேண்டியது ஆரியம் என்றால், ஆரியர்களே, தமிழர்கள் மீது மனுவாதித் திணிப்ப செய்தனர் என்று இந்தத் திராவிடவாதிகள் சொல்வது உண்மை என்றால், ஆரியப் படைகளை வென்ற அந்த அரசன், அந்த மனுவாதி வர்ணாஸ்ரமத்தைத் தன் நாட்டிலிருந்து விரட்டியிருக்கலாமே?

அப்படிச் செய்யாமல், வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் என்று ஏன் செய்யுள் இயற்றிக் கொண்டிருக்க வேண்டும்?

அந்த வர்ணப்பகுப்பு, தமிழ் மக்களிடையே இயல்பாக இருந்திருக்கவேதானே அவன் அதைத் தவறாகவோ, அல்லது ஆரியத்திணிப்பு என்றோ கருதவில்லை.?

பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று அனைத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்று அந்நாளில் சொன்னதற்குக் காரணாம், கல்வியானது ஒழுக்கத்தைத் தரும் என்பதால்தான்

ஒழுக்க சீலனான எந்த வர்ணத்தவராக ஒருவர் இருந்தாலும் அவருக்கு மரியாதை இருந்தது. அவர் சொல்லுக்கு மரியாதை இருந்தது.

அப்படி ஒழுக்க நெறியில் ஒருவன் இருந்தால் அதுவே உயர் குடிப் பிறப்பு எனப்பட்டது. குடி என்பத வர்ணத்தில் வரவில்லை.  எந்த வர்ணத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நன்னெறியும், ஒழுக்கமும் கொண்டிருந்தால் அவன் உயர்ந்த குடியினன் என்று சொல்லப்பட்டான். நாலடியாரிலும், திருக்குறளிலும் வேண்டிய அளவுக்கு இவற்றை விவரித்துள்ளார்கள். குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கங் கொண்டார் என்னும் நாலடியார் (குடிப்கிறப்பு-4) செய்யுள். இந்த உயர் குடி என்பது ஒழுக்கத்தால் வருவது, வர்ணத்தால் வருவதல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால் அதற்காக அவன் வர்ணத்தைக் குறை சொல்லவில்லை.  ஒழுக்கமில்லை என்றால் அவன் கயவன் எனப்படுவான். மேலே மேற்கோளிட்ட அந்தச் செய்யுள் இதைச் சொல்கிறது.  ஒழுக்கமுடையவர் உயர் குடிப்பிறந்தோர் எனப்படுவர். ஒழுக்கமில்லாதவர் கயவராவார்.

அந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிற கல்வி, ஆறு வகைப் பார்ப்பியலில் வருகிற வேதமொழிந்த கல்வி.  தர்ம நூல்களும், ராமாயணமும், மஹாபாரதமும், புராணங்களும் தான் அந்த ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றன.  அந்தக் கல்வியைக் கற்றவனைத் தலை வணங்கி இருக்கிறார்கள்.

அவன் நான்மறை தெரிந்த பார்ப்பனனாக இருந்தால், அரசர் முதல் பிற வர்ணத்தவர்கள் தலை வணங்கியிருக்கிறார்கள்.  

கற்றறிந்த  நாலாம்  வர்ணத்தவனாக  இருந்தாலும்,  அவனுக்கு   பார்ப்பனர், அரசர் முதல் அனைவரும் தலை வணங்கியிருக்கிறார்கள். 

அந்தக் கல்வி கற்றவர்களுக்குத்தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றிருக்கிறார்கள்.  மனுவாதி சூத்திரனாக இருக்கட்டும், சாகத்தீவின் மந்தக சூத்திரனாக இருக்கட்டும், அவர்களைப் பற்றியச் சொல்லுமிடத்தே, அவரவர்கள் தர்ம நெறியில் நின்று சிறக்க வாழ்ந்தார்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது. அது போலவே தமிழக வேளாண் மக்களும் தர்ம நெறியில் நின்று உயர் குடியினராக மதிக்கப்பட்டு இருந்தார்கள்.  இந்தக் கருத்தை திருக்குறள் குடியையில் உரையில் பரிமேலழகர் சொல்வதைக் காணலாம்.

புலன்  அழுக்கற்ற  அந்தணன்’  என்று   கபிலரை, மாறோக்கத்து நப்பசலையார் சொல்லியுள்ளார்.  புலன்   அழுக்கில்லாமை என்பது அந்தணனுக்கு மட்டுமல்ல, அன்றைய அறக்     கல்வியைக் கற்ற எவருக்குமே  வரக்கூடியது.

இன்றைக்குத் திராவிடம் பேசும் திராவிடவாதிகளுக்கு அது இருக்கிறதா?

அறக்கல்வி கற்காமலும், அறக்கல்வியை மதிக்காமலும் இருக்கிற இந்தத் திராவிடவாதிகள், அன்றைய தமிழ் நிலங்களில் இருந்திருந்தால் கயவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருப்பார்கள்.

சங்க நூல்களில் பிற வர்ணத்தவர் ஆதிக்கம்.

மற்ற வர்ணத்தவர்கள், அந்தணர்களிடமிருந்து கல்வி கற்றார்கள்.

கற்ற கல்வியை வெளிப்படுத்தவும் செய்தார்கள்.

அப்படி வெளிப்படுத்திக் கொள்வதிலும்,

அந்தணர்கள் மற்ற வர்ணத்தவருடன் போட்டிக்கு வந்ததில்லை. 

அப்படிப் போட்டியிட்டிருந்தால், 

சங்க நூல்களில் அந்தணர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்திருக்கும்.

ஆனால் சங்க நூல்களில் அந்தணர்கள் எழுதிய பாடல்கள் குறைவு. 

அவர்கள் வேதம் ஓதுதலிலும், கற்பித்தலுமே காலத்தைக் கழித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள்,

தங்கள் பெயரை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மற்றவர்களுக்கு ஒரு ஏணியாகத்தான் தமிழ்ப் பார்ப்பனன் இருந்திருக்கிறான்.

உதாரணத்துக்குப் புறநானூறை எடுத்துக் கொண்டால்,

அதில் அந்தணர்கள் எழுதிய செய்யுள்கள் குறைவு.

அரசர்களும், வணிகர்களும் வேளாண் மக்களும் எழுதிய பாடல்களே அதிகம்.

பிற சங்க நூல்களிலும் கடை இரண்டு வர்ணத்தவரே

அதிக செய்யுள்கள் இயற்றியுள்ளனர்.

குறுந்தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால்,

  • ‘ஆசிரியன் பெருங்கண்ணனார்’என்று ஆசிரியர் பட்டத்துடன் ஒருவரும்,
  • மதுரை ஆசிரியர் கோடங் கொற்றனார்’என்ற ஒருவரும் என இருவரே

ஆசிரியர் என்ற பெயருடன் இருக்கின்றனர். பொதுவாகக் கற்பித்தலைப் பார்ப்பனர்கள் செய்யவே, இவர்கள் பார்ப்பனர்களாக இருக்கக்கூடும்.

குறுந்தொகைப் பாடல்களை எழுதியவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று பிற வர்ணத்தவரே அதிகம் இருக்கிறார்கள்.

  • அவர்களில்கொல்லர்கள் இருவர்.
  • அவர்களது பெயர்கள்,மதுரைக் கொல்லன் புல்லன் (373),
  • மதுரைப் பெருங்கொல்லர்(141)
  • வணிக வர்ணத்தைச் சேர்ந்தவர்,’மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார்’. அறுவை என்றால் ஆடை என்று பொருள். இவர் துணி வியாபாரியாக இருக்க வேண்டும்.
  • மதுரை எழுத்தாளர் சேந்தம் பூதனார்’என்பவர் எழுத்தாளர் பணியில் இருந்திருக்க வேண்டும்.
  • மதுரை வேளா தத்தர்’என்றும் ஒரு புலவர் இருந்திருக்கிறார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • மிளை வேள் தித்தனார்’என்னும் பெயர் கொண்ட புலவரும் வேளாண் தொழில் செய்தவராக இருக்க வேண்டும்.
  • வாயிலான் தேவனார்’என்றும், ‘வாயிளங் கண்ணனார்’ என்றும் பெயர் கொண்ட புலவர்கள் வாயில் காப்போனாக இருந்திருக்க வேண்டும். அவரவர் செய்த தொழிலைக் கொண்டும் பெயர் வைத்திருக்கின்றனர். வாயில் காக்கும் தொழில் கீழ்மையானது என்று எண்ணப்படவில்லை. எல்லாத் தொழில்களுக்கும் மரியாதை இருந்தது.
  • வண்ணக்கன் என்ற பெயரில் இரண்டு புலவர்கள் குறுந்தொகையில் எழுதி உள்ளார்கள். வண்ணக்கன் என்றால் நாணய பரிசோதகர் என்று பொருள். அந்த நாளில் வேறு பட்ட வேலைகள் இருந்திருக்கின்றன. அவற்றைச் செய்ய விசேஷ திறமைகளைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
  • வாத்தியக் கருவிகள் வாசித்தவர்களும் செய்யுள் இயற்றியுள்ளார்கள். ‘நெடும் பல்லியத்தனார்’, ‘நெடும் பல்லியத்தை’ என்ற பெயர்களில் இரண்டு புலவர்களது பாடல்கள் குறுந்தொகையில் காணப்படுகின்றன.  பல்லியத்தை என்றும் அடை மொழி, பல வாதியங்களை உடையவர்களுக்கு அளிக்கப்படுவது.
  • வாத்தியம் இசைத்தவர்களைப் போல கூத்தர்களும் பாடல்கள் எழுதி உள்ளனர்.’வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்’ என்பவரது பெயர் அவர் கூத்தாடுபவர் என்பதைக் காட்டுகிறது.

செய்யும் தொழில், ஆர்வம் என வகை வகையாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் வேதமொழிந்த கல்வியாக, முதல், இடை, கடை என இலக்கண, இலக்கியம், தர்ம நூல் போன்றவற்றைப் பயின்று இருந்தால்தான் திணை, துறை சுத்தமாகச் செய்யுள் இயற்றி இருக்க முடியும்

  • குலபதி என்ற அடைமொழியுடன் ‘கிடங்கிற் குலபதி நக்கண்ணனார்’ என்ற புலவர் இருந்திருக்கிறார். ஆயிரம் மாணவர்களை ஆதரித்துக் கல்வி புகட்டுபவருக்குக் குலபதி என்ற பட்டம் கொடுப்பார்கள். கல்விக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்தால், இப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்? இப்படி ஒரு பட்டம் வழங்கும் வழக்கம் இருந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்தனர் என்பதும் தெரிகிறது.

வர்ண மக்களை விடுங்கள். ஒரு ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் இருக்கிறது.

  • ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் என்பது இவன் பெயர். (குதொ-184). இந்த அரசனுக்குக் கபிலர் தமிழ் கற்றுக் கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அதற்காக அவர் இயற்றியதே குறிஞ்சிக் கலி என்றும் சொல்லப்படுகிறது. ஆரியத் திணிப்பு நடந்தது என்று திராவிடவாதிகள் கூறுகிறார்களே, இதற்கு என்ன  சொல்கிறார்கள், விரட்டியடித்தவனும், தினித்தவனுமாக ஆரியர்கள் இருந்திருந்தால். இந்த ஆரிய அரசன் எழுதிய பாடல் குறுந்தொகையில் எப்படி இடம் பெற்றிருக்கும்? 

குறுந்தொகையில் உள்ள பிற பெயர்களைப் பாருங்கள். அவை வடபால் முனிவர்கள் பெயராக இருக்கின்றன.

  • கடம்பனூர்ச் சாண்டில்யன்  என்ற ஒரு புலவர் எழுதிய பாடல் இருக்கிறது (307)

யார் இந்தச் சாண்டில்யன்? ஒரு ரிஷியா? சாண்டில்ய கோத்திரத்தில் வந்தவரா? அல்லது இந்தப் பெயரைக் கொண்ட வடபால் புலவர் ஒருவரா? ஆனால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்வோம். தமிழ்ப் புலமை இருந்திருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்வோம்.

  • இன்னொரு புலவர்.இவர் பெயர் கருவூர்ப் பவுத்திரனார் (குறுந்தொகை – 162)

இந்தப் பெயர் பவித்திரம் அல்லது பேரன் என்ற பொருள் கொண்ட பௌத்திரன் என்னும் வட சொல்லாகும். ஆனால் அவரது ஊர்ப் பெயரோ கருவூர் என்பது. தமிழும், சமஸ்க்ருதமும், சங்க காலம் வரை உறவாடியது என்பதற்கு இதை விட வேறு சாட்சி என்ன வேண்டும்?

  • இந்தப் பெயரைப் பாருங்கள்.’கருவூர் ஓத ஞானி’. (குதொ – 71) ஓத ஞானி என்பது சமஸ்க்ருதப் பெயர். பரந்த ஞானம் என்பது இதற்குப் பொருள். வெறும் ஓத ஞானி என்னும் பெயரிலும் ஒருவர் எழுதியுள்ளார்.
  • இன்னொரு புலவர்‘நெய்தல் கார்க்கியர்’ எனப்பட்டார். (கு தொ 212)

இவர் நெய்தல் நிலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் கார்க கோத்திரத்தைச் சேர்ந்தவரா, கார்க ரிஷியின் வம்சமா, அல்லது கார்க்கி என்னும் பெண்பால் ரிஷியின் வழி வந்தவரா? அல்லது வட புலத்திலிருந்து தமிழ் நாட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டவரா? இவர் எழுதிய இரண்டு பாடல்களிலும், நெய்தல் நில வாழ்க்கையும், தலைவன் மணியொலிக்கத் தேரிலேறி கடற்கரைக்கு வரும் காட்சியும் சொல்லப்படுகின்றன. கடற்கரையோரம் தவ வாழ்க்கையை மேற்கொண்ட வடபால் தவ முனியரோ இவர் என்று எண்ணும் வண்ணம் இவர் தாம் பார்த்த காட்சிகளை விவரிக்கும் பாங்கு அமைந்திருக்கிறது.

  • இன்னொரு பெயரும் இருக்கிறது.அது ‘தேவ குலத்தார் ”குறுந்தொயையின் 3 ஆவது பாடல் இவரால் இயற்றப்பட்டது.  தேவன் என்னும் பெயரில் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் இருக்கிறார்.  தமிழ் மக்களின் வாழ்க்கை வேத மரபின் அடிப்படையில் இல்லையென்றால், இப்படிப் பட்ட பெயர்கள் வரமுடியாது.

வேத மரபின் அடிப்படை என்பது மட்டுமல்ல, வடக்கு, தெற்கு வித்தியாசம் இல்லாமல் ஒரு கலந்துறவாடல் நடந்திருக்கிறது.  தமிழும்,  சமஸக்கிரதமும், தமிழ் நாட்டவரும் அறிந்திருந்தனர்,  வட நாட்டவரும் அறிந்திருந்தனர் என்பதை நச்சினார்க்கினியர் தெரிவித்துள்ளார்.

தொல்காப்பிய வர்ண சூத்திரத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார்  ’தமிழில் தலை ஓதல்” என்பது பற்றிச் சொல்லும் விவரம் இதை       நிலை நிறுத்துகிறது.

அவர் சொல்கிறார்:-

தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும்,  

அகத்தியனாரும்,  

மார்க்கண்டேயனாரும்,

வான்மீகனாரும்,  

கவுதமனாரும் போலார் செய்தன தலை.

என்கிறாரே இவர் சொல்லும் இந்தப் பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களா?

  • இந்தப்பெயர்களில் இறையனார் என்பது சிவ   பெருமானைக் குறிக்கும்.
  • அகத்தியனார், நமக்கு மிகவும் அறிமுகமானவர்.  ஆனால் அவர் வடபால் முனிவர்தான்.

9

  • அவரது மனைவி லோப முத்திரை என்பவள் உத்தர குருவைச் சேர்ந்தவள்  என்று ஒரு கருத்து இருக்கிறது. ரிக் வேதத்தில் ஒரு பாடல் அவளால் இயற்றப்பட்டது.  ராவணனைப் போரில் வெல்ல, ராமனுக்கு அகஸ்தியர் சமஸ்க்ருதத்தில் ஆதித்தியஹ்ருதயம் என்னும் பாடலை உபதேசித்துள்ளார். அவரே தமிழுக்கும் ஆசான் என்பது நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • அடுத்து மார்க்கண்டேயரைப் பற்றி நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளாரே,  இவரும் சமஸ்க்ருதத்தில் புராணம் தந்துள்ளார்.

10

  • சிவபெருமானது அருளால் சாவை வென்று என்றும் பதினாறாக, சிரஞ்சீவியாக இருப்பவர் என்று சொல்லப்படும் மார்க்கண்டேயர் தமிழில் எழுதியுள்ளார் என்பது தெரிகிறது ஆனால் தமிழ்க் கல்வியில் அவர் தந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறாரே அது எப்படி? தமிழ் இலக்கிய,  இலக்கணத்தில் மார்க்கண்டேயர் எழுதிய நூல்கள் இருந்தன என்றுதானே அர்தமாகிறது.
  • அடுத்து, கவுதமனார் என்ற பெயரைப் பாருங்கள். பாலை பாடிய கவுதமனார் என்று ஒருவர் இருந்தார். பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தைப் பாடியவரும் ஒரு கவுதமனார். இருவரும் ஒருவரே என்று சில ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது என்கிறார் டா. உ.வே.சா அவர்கள். இந்தக் கவுதமனார் ஒரு பார்ப்பனர். அவரும் அவரது மனைவியும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று ஒரு யாகம் செய்ய விரும்பினர். அந்த யாகத்தைச் செய்யச் சேர மன்னன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் உதவினான். இந்தக் கவுதமனாரைத்தான் நச்சினார்க்கினியர் சொல்லியிருக்க வேண்டும். இவர் கவுதம கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அந்தக் கோத்திரம் அவரை ஆரிய வர்த்த ரிஷிகள் மரபில் வைக்கிறது. அந்த மரபில் வந்த இவர் தமிழின் தலை ஓதலுக்கான இலக்கண இலக்கியம் படைத்தவர் என்பது, வடக்கு- தெற்கு என்ற வித்தியாசம் அன்று இல்லை என்பதையும், தமிழையும், சமஸ்க்ருதத்தையும் இன்றியமையாத இரு கண்களாக அறிஞர்கள் பார்த்தார்கள் என்பதையும் தெரிவிக்கிறது.
  • அதுபோல வான்மீகனார் என்கிறாரே? அவர் யார்? ராமாயணம் எழுதிய வால்மீகியா? வான்மீகம் என்பது ஒரு சமஸ்க்ருதச் சொல்தான். கரையான் புற்றுக்கு வால்மீகம் என்று பெயர்.

11

அவர் தியானத்தில் அமர்ந்த பொழுது அவர் மீது கரையான் புற்று கட்டி விடவே  அவர்  இந்தப் பெயர் பெற்றார். எனவே இது காரணப்பெயர். இந்தப் பெயரில் வேறு ஒருவர்  இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அவர் எழுதிய இலக்கண, இலக்கிய நூல்களைப் படித்தலே தமிழ்  மொழியில்  தலையாய கல்வி என்கிறாரே அது எப்படி?

தமிழில் வால்மீகி எழுதியுள்ளாரா?

About Author :- Jayasree Saranathan. Dr Jayasree Saranathan is a researcher, writer and astrologer with a PhD in Astrology. Her research areas include Indology, Hindu Epics, …  visit jayashreesaranathan.blogspot.com

 

பின்னூட்டமொன்றை இடுக