பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 7 – ( தலித்துகளும் பிராமணர்களும் )

Ref :- தலித்துகளும் பிராமணர்களும் ( கே.சி.லட்சுமி நாராயணன் ) – thanjavooraan.blogspot.com &  tamilnaduthiyagigal.blogspot.com & Web Pages

. வைத்தியநாத ஐயர் ( 12 )

 

1

வைத்தியநாத ஐயர் ஹரிஜன தொண்டை ஆண்டவன் தொண்டாகக் கருதி வாழ்க்கை நடத்தியவர்.  தனது வீட்டில் தினமும் ஒரு ஹரிஜனமாவது உணவு அருந்த வேண்டும் என்ற கொள்கை உடையவர். அவரது மனைவி அகிலாண்டதம்மாள் ஹரிஜனத் தொண்டில் ஐயருக்கு வலக்கரம் போல் விளங்கியவர்.  கிருஷ்ணசாமி ஐயங்கார் தான் மதுரைக்கு செல்லும்போதெல்லாம் தன்னுடன் ஹரிஜன வளர்ப்பு பையன் சம்பந்தத்தையும் கூட்டிச் செல்வார். ஐயர் சம்பந்தத்தை தன் மடியில் அமர்த்தி பாரதி பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார். ஐயர் தனது வீட்டில் ஒரு மரண சம்பவம் நடந்தும் அதைச் சட்டைசெய்யாமல் தீருவான்கூருக்குச் சென்ற ஆலயப்பிரவேச குழுவை வழி நடத்திச் சென்றவர். எம்.ஆர்.சுப்பராயன் – உறவினர் வி.கே.ராமாசாரியார் – க.அருணாசலம் – கல்லுப்பட்டி ஆர்.குருசாமி போன்றோர் ஹரிஜனத் தொண்டில் ஐயரோடு ஈடுபட்டவர்கள். மதுரைக் கோவிலுக்கு ஹரிஜனங்களை அழைத்துச் சென்றுதான் தீருவேன் என்று பல சட்ட விதிகளை நீதிமன்றத்தில் கூறி வாதாடி வெற்றி கண்டவர்.

சதானிகள் கூட்டம் போட்டு ஹரிஜனங்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்பார்கள் இவர் எதிர் கூட்டம் போட்டு நான் ஹரிஜனங்கள் கோவில் நுழைவை நடத்தியே தீருவேன் என்று பதில் உரை நிகழ்த்துவார். அம்மனை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவோம் என்பார்கள்.  அதற்கு ஐயர் அம்மன் ஹரிஜனங்களுக்குப் பயந்து ஒழிந்து கொண்டால் அவர் சக்தியைவிட ஹரிஜனங்களின் சக்தியே மேல் என்பார்.

கறைபடியாத கரங்களுடன் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணி செய்த திரு.கக்கன் ஐயரின் உதவியால் படித்து உயர்ந்தவர் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். ஐயரை தன் குருநாதர் என்று அடிக்கடி கக்கன் சொல்லிக் கொண்டிருப்பார் கக்கன் பலரும் அதிசயிக்கும் வண்ணம் ஒரு எளிமையான தூய வாழ்க்கை வாழ்ந்தவர். தனக்கென்று ஒரு காலணாகூட சேர்த்து வைத்துக் கொள்ளாதவர். இதற்கு அவரை உருவாக்கிய ஐயரே காரணம். பெரியாரின் இறுதிச் சடங்கிற்கு ஐயர் காரில் சில நண்பர்களுடன் செல்லுகையில் கக்கன் தெருவில் தனிமையில் நடந்து அந்த இறுதி மரியாதை செலுத்தச் சென்று கொண்டிருந்தார். ஐயர் அவரை காரில் வரச்சொல்லியும் அவர் அதற்கு இணங்காமல் வாதம் செய்தார். பலவந்தமாக ஐயரும் அவரது நண்பர்களும் அவரை காரில் அழைத்துச் சென்றார்கள். ஒரு மாநிலத்தின் அமைச்சர் இப்படியான எளிமையை கடைப்பிடித்து வாழ்வது காண்பதற்கு அரிதாகும்.

ஒரு சமயம் ஐயர் தான் சேர்த்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி முடிந்துவிட்டதால் அவசர அவசரமாக ஒரு காசோலையை எழுதிக்கொண்டிருந்தார். தனது மனைவி அவரை உணவு அருந்த அழைத்தும் செல்லாமல் தன் மனம் மாறுவதற்குள் அதைச் செய்து முடித்தார். அந்த காசோலையில் ”ஹரிஜன சேவா சங்கத்திற்கு” என எழுதியிருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் பொறுப்பில் 1935 முதல் 1955 வரை ஐயர் சேவை செய்தார். இவர் பரம்பரை செல்வந்தர் மேலும் தனது வக்கீல் தொழிலிலும் நிறையப் பணம் சேர்த்தார். ஐயர் ஹரிஜனங்களுக்காகப் பல ஊர்களில் பள்ளிக்கூடங்களையும் – மாணவர் விடுதிகளையும் கட்டியுள்ளார். அந்த கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு உணவு – உடை – புத்தகங்கள் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இதற்காகத் தனது சொத்தில் பெரும் பகுதியைச் செலவு செய்தார்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் – திருவெண்ணை நல்லூர் கிருபா ஆசிரமம் – சென்னை நந்தனார் கல்விக் கழகம் – கோவை ராமகிருஷ்ணா மிஷின் வித்தியாலயா – திருச்சி பொதுநல ஊழியர் சங்கம் – வேலூர் ஔவையார் கல்விக் கழகம் – சென்னை ஆதி திராவிட மகாஜன சங்கம் – சென்னை அருந்ததியர் மகாஜன சங்கமம் – தேவேந்திர குல வேளாளர் சங்கம் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கிய சங்கங்களுக்குத் தனது தலைமையில் பொருளாதார உதவிகளையும் பிற உதவிகளையும் பரிபூரணமாக செய்தார்.

ஐயர் எந்த எதிர்ப்பிற்கும் பயம் கொள்ளாமல் மதுரை மீனாக்ஷிஅம்மன் கோவிலுக்கு ஹரிஜனங்களுடன் தான் சென்று தரிசனம் செய்யப் போவதாகத் தேதியையும் அறிவித்தார். இதைப் பல சதானிகள் எதிர்த்தார்கள். அவரது வீட்டைக் கொளுத்துவோம் அவரையும் கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள்.  எதற்கும் அஞ்சாமல் தான் அறிவித்த 1939 ஆம் ஆண்டு ஜுலை 8 ஆம் தேதி அன்று தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் ஆலயம் சென்று வழிபாடு நடத்திக் காட்டிய தைரியசாலி ஐயர். அவருக்கு முத்துராமலிங்க தேவர் பாதுகாப்பு அளித்தார்.

இது நிகழ்ந்தது 80 ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது தீண்டப்படாதார் ஆலயத்தில் நுழையக்கூடாது என்று சட்டமே இருந்தது. ஆங்கில அரசின் மேற்பார்வையில் ஆட்சியிலிருந்த ஜஸ்டிஸ் கட்சி இந்த சட்டத்தை விலக்க மனம் விரும்பவில்லை.  பின்பு ராஜாஜி ஆட்சியில் ஐயரால் முன்மொழியப்பட்டு ஆலயப்பிரவேச மசோதா அமுலுக்கு வந்தது. இதைப் பாராட்டி காந்தி தனது ஹரிஜன் பத்திரிகையில் ஒரு கட்டுரையும் எழுதினார். மதுரை ஆலயப்பிரவேசத்தில் ஐயருடன் சென்ற தலித் சகோதரர்கள் பி.கக்கன் – முத்து – பி.ஆர்.பூவலிங்கம் – வி.எஸ்.சின்னையா – ஆவலம் பட்டி முருகானந்தம் ஆகியவர்களுடன் விருதுநகரைச் சேர்ந்த எஸ.எஸ்.சண்முக நாடார் – ஹரிஜன சுவா சங்கத்தின் செயலர் கோபால்சாமியும் அவர்களுடன் சென்று ஆலயத்தில் அம்மனை வழிபட்டார்கள்..

மதுரை ஆலயப் பிரவேசத்தைத் தொடர்ந்து கூடலூர் கோயில் – பழனி தண்டாயுதபாணி கோயில் – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் – வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் – தஞ்சை பெரிய கோவில் என்று வரிசையாகப் பல கோவில்களிலும் ஹரிஜன பிரவேசம் ஐயரின் முயற்சியாலும் – முன்கூட்டியே செய்த ஏற்பாடுகளாலும் இனிதே நடந்தது.  இதனால் ஐயர் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது அவற்றை எல்லாம் சாமர்தியமாகச் சமாளித்தார் அதற்கு உற்ற துணை நின்றவர் இராஜாஜி..

1946 இல் வைகை நதிக்கரையில் தி.க.மாநாடு நடந்தது. அதற்கு வந்த காலிகள் கூட்டம் மதுரை கோவிலுக்குச் சென்று ஹிந்து கடவுள்கள் பற்றிப் பல அவதூறு பேசி கிண்டலும் கேலியும் செய்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்தனர். மதுரை ஷெனாய் நகரில் பெரியார் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரை அடித்து உதைக்கவும் முயன்றனர்.  போலீஸ் வந்தும் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. இதை கேள்விப்பட்ட ஐயர் விரைந்து வந்து கூட்டத்தைச் சாந்தப்படுத்தி கலையச் செய்து பெரியாரை ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.

1991 ஆம் ஆண்டு ”தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கம் ” மே மாதத்தில் ” ஹரிஜன தந்தை” என்ற தலைப்பில் ஐயரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து இந்த நூலை வெளியிட்டது.  1955 ஆம் வருடம் அவர் சிவலோக பிராப்தி அடைந்தார். 35 ஆண்டுகளுக்குப் பின் எதையும் மறைக்காமல் இந்த நூல் எழுதப்பட்டது என்றால் அவரது தொண்டு எளிதில் அளக்கக்கூடியது அல்ல என்பதாகும். நூல் ஆசிரியர் முனைவர் பி.எஸ்.சந்திரபிரபு.

ஐயர் காந்தியின் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர். வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் இராஜாஜி கைது செய்யப்பட்டார் பின்பு தடையை மீறி நடத்திய கூட்டத்தில் ஐயர் ஆவேசமாகப் பேசினார்.  அவரை ஆங்கிலேயர் புளியமர விளாரால் தாக்கினார்கள். அவரை தரையில் தெருவெங்கும் இழுத்துச்சென்று பலத்த காயங்களுடன் சிறையில் அடைத்தார்கள். கள்ளுக்கடை போராட்டம் – சட்ட மறுப்பு இயக்கப் போராட்டம்  இவற்றில் பங்குகொண்டு பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது மனைவியின் நகைகள் – வீட்டுப் பொருள்களை அடகுவைத்த செலவு செய்தார். அவர் ஒரு சமயம் ஆங்கிலேயர் விதித்த அபராதத்தைக் கட்டாததினால் அவரது கார் மற்றும் சட்ட புத்தகங்களைச் சப்தி செய்தார்கள். தனி நபர் போராட்டத்தில் தனது மனைவியைப் பங்குகொள்ள செய்தார்.  அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தார்கள். தனது மூத்த மகன் சங்கரனையும் விடுதலைப் போரில் பங்கு கொள்ளச் செய்தார் – அவரும் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். ஐயர் அலிப்பூர் சிறையிலிருந்தபொழுது மூத்தமகன் இறந்துபோனார்.  அவரால் பிள்ளையின் இறுதி சடங்கிற்குக்கூடச் செல்ல முடியவில்லை. தன் சிறைத் தண்டனை பரோல் சமயத்தில்தான் தன் மகளின் திருமணம் நடத்தினார். இப்படித் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், நாட்டிற்கும் உழைத்தவர் தியாகி வைத்தியநாத ஐயர் மற்றும் அவர் குடும்பத்தார்.

கே.ஆர்.கல்யாணராம ஐயர் ( 13 )

2

வட ஆற்காடு மாவட்ட ”ஹரிஜன சேவா சங்கத்தில் ” முதலில் செயலராகவும் பின்பு தலைவராகவும் இருந்து செயல்பட்டவர். எளிமையான தோற்றம் கொண்டவர் – கதர் வேஷ்டி சட்டை நெற்றியில் விபூதி பட்டையுடன்தான் காட்சி அளிப்பார். இவர் மிதி வண்டியிலேயே வட ஆற்காடு மாவட்டம் முழுவதும் சென்று ஹரிஜனங்கள் நல்வாழ்விற்காகப் பிரசாரம் செய்தவர்.

ஹரிஜனங்கள் நம்மை போல் மானிட பிறவிகளே – நமது உடன் பிறப்புகளாகக் கருதப்பட வேண்டியவர்கள்.  நாம் உயிர் வாழ வேண்டிய உணவை உற்பத்தி செய்து கொடுப்பவர்கள். அவர்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களைத் தொட்டால் தீட்டு நிழல் பட்டால் தீட்டு என்று சொல்லுவது முட்டாள்தனமானது. அவர்களது வாழ்க்கை உயராதவரையில் நமது சமூகம் உயர்வடையாது எனவே அவர்களுடன் ஒன்றி வாழ்வதே அறிவுடையார் செய்வதாகும் என்று போகும் இடம் எல்லா சூளுரைத்தார் என்பதை ”தொண்டின் நாயகன்”  என்ற நூல் தெரிவிக்கிறது.

அவர் ஹரிஜன சேவா சங்கத்தின் மூலமாகத் தீண்டாமை ஒழிப்பு பிரசார பிரசுரங்களை வெளியிட்டு வினியோகம் செய்தார். அவரது வீட்டில் என்றும் தடையின்றி ஹரிஜனங்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. அதை அவரது குடும்பமே ஆதரித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் உயர் கல்வி பயில நிதி உதவிகள் செய்தார். தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் தீயாலோ அல்லது மழையினாலோ சேதம் அடைந்தால் விரைந்து சென்று நிவாரண பணிகளை அரசுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்வார். தானே நிதியும் திரட்டி அவர்களுக்குக் கொடுப்பார்.

இன்றைய திருவண்ணாமலை – வேலூர் சேர்ந்திருந்த வட ஆற்காடு மாவட்டம் 70 ஆண்டுகளுக்கு முன் கடும் பஞ்சத்தில் உழன்றது. பலர் ஊரையே காலி செய்தனர் – சிலர் குடும்பங்களை விட்டுவிட்ட வேலை தேடிச் சென்றனர். அதனால் ஊரில் 24 குழந்தைகள் தலித் குழந்தைகள் உட்பட அனாதையாக திரிந்தார்கள். இதைப்பார்த்த ஐயர் நெஞ்சம் கலங்கியது. அவர்களுக்கு உணவு அளித்த கல்வி கற்பித்துப் பேணி காப்பது யார் என்ற வினாவிற்கு விடை தேடினார். ஆக்கூர் அனந்தாசாரியார் – கே.ஆர்.ஜமதக்னி நாயகர் ஆகியோருடன் சேர்ந்து 1952 இல் ”காந்தி மிஷின் வித்தியாலயா” என்ற அமைப்பைத் இராணிப்பேட்டையில் தொடங்கினார் திரு.பித்துக்குளி முருகதாஸ் இதன் தலைவராக 1980 ஆம் ஆண்டு வரையில் இருந்தார்.  அதன் செயலராக ஐயர் 1971 ஆம் ஆண்டு வரையிலிருந்தார்.

ஆசிரமத்தில் படித்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளை அரவணைப்போடு நடத்தினார். இந்த ஆசிரமத்தில் தேச பக்தி – தெய்வ பக்தி – நல்லொழுக்கம் – சமதர்மம் – சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகளை மாணவர்கள் மனதில் ஆழமாக பதியுமாறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆசிரமத்தில் குழந்தைகள் அவரை ”அப்பா” என்றே அழைப்பார்கள். இங்கே படித்த ஒரு சகோதரியை தன் மூத்த மகனுக்கு மணம் முடித்தார். இந்த காந்தி மிஷன் வித்தியாலயா பின்னாளில் வாலாஜா பேட்டைக்கு மாற்றப்பட்டு தற்போது ”தீனபந்து ஆஸ்சிரமம்” என்ற பெயருடன் பெரிய பள்ளிக்கூடமாக வளர்ந்துள்ளது. இங்கே ராஜாஜி முதல் பெரிய தலைவர்கள் பலர் வந்து பார்த்துவிட்டு ஐயருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். பெரியார் ஒருநாள் வந்து பார்த்து ஐயரைப் பாராட்டி ஒரு ரூபாய் நன்கொடை அளித்தார். அதை ஐயர் பெரியாரின் நினைவாகக் கடைசிவரை வைத்திருந்தார். ” தீனபந்து ” என்றால் ஏழைகளின் நண்பன் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

30.03.1955 இல் ஐயரின் சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் வெள்ளித் தட்டு வழங்கி கௌரவித்தார். 1956 இல் தமிழக அரசு ஐயரின் தீண்டாமை ஒழிப்பு பணியினைப் பாராட்டித் தங்கப் பதக்கம் பரிசளித்தார்கள். ஐயர் தீண்டாமை ஒழித்து ”மதுவிலக்கை” அமுல் செய்தால்தான் அவர்கள் முன்னேற்றம் சாத்தியம் என்று தீவிரமாக பிரசாரம் செய்தார். ”மது விலக்கின் மாண்பு” என்ற ஒர் சிறந்த நூலையும் எழுதினார். மதுவிலக்கிற்காக 500 கூட்டங்களுக்குமேல் ராஜாஜியுடன் சென்று பிரசாரம் செய்துள்ளார்.

3

ஒரு பட்டப்படிப்பு ஆய்வுக் கட்டுரை ஐயரைப் பற்றி இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது ” But for his untiring service, the Ashram would not have achieved preeminence.  It is no exaggeration to state that every piece of work executed by iyer expresses his constructive, methodical, economic, social and ideallisic views”

 ஐயர் விடுதலை இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கெடுத்தவர். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்புக் கிளர்ச்சியில் கைது செய்யப்பட்டு விலங்கு பூட்டி வேலூர் சிறையில் ஒரு வருடம் வைக்கப்பட்டார். அதே ஆண்டு இறுதியில் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார்.  1942 ஆம் வருடம் ஆகஸ்ட் புரட்சியில் கைது செய்யப்பட்டு மூன்றாவது முறையாக ஒரு வருடம் ஆறு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார். 1972 ஆம் வருடம் அவருக்குத் தாமிர பத்திரம் வழங்கப்பட்டது. 1984 காமராஜர் சிலை அமைப்புக்குழு அவரது தொண்டை பாராட்டி  நினைவு கேடயம் வழங்கி கௌரவித்தார்கள். இவரை தலித் தோழர் பட்டியலில் சேர்பது இயல்பானதே.

கே.சுப்ரமணியம் ( 14 )

4

முதல் முதலில் திரைப்படங்களின் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சென்றவர் டைரக்டர் கே.சுப்ரமணியம்.  இவர் காந்தியின் மீது பற்று கொண்டவர் தேசிய விடுதலை போராட்டங்களிலும் தீவிர பற்று உள்ளவர். 1904 ஆம் ஆண்டு தஞ்சையில் பிறந்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பட்ட படிப்பு படித்தார். அப்பொழுது இவர் எழுதிய ”தென் இந்திய கலாச்சாரம்” என்ற ஆங்கில கட்டுரை இங்கிலாந்தில் நடந்த ஒரு போட்டியில் 2 வது பரிசைப் பெற்றுத் தந்தது. சட்டம் படித்து சிறிது காலம் வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். பின்பு திரைப்பட துறையில் நுழைந்தார். ராஜா சாண்டோவுடன் பணி செய்து சில படங்கள் வெளிவந்தன. அவை பவளகொடி – அனாதைப் பெண்.  நவீன சாரங்கதரா என்ற படத்தை முதலில் தானே இயக்கினார்

1937 இல் ”பாலயோகினி” என்ற சமூக சீர்திருத்தப் படத்தை வெளியிட்டார். இதில் தீண்டப்படாதார் ஆலயப்பிரவேசம் அவசியம் என்பதைப் பற்றிப் பல கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தது. சாதிக் கொடுமைகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். 80 ஆண்டுகளுக்கு முன் பிராமண பெண் கணவனை இழந்தால் மொட்டை போடும் பழக்கம் இருந்தது. இந்த மூடபழக்கத்தையும் எதிர்த்து கருத்துகளைச் சொல்லியிருந்தார். இந்த விதவை வேடத்திற்கு ஒரு பிராமண மொட்டை போட்ட பெண்ணையே நடிக்க வைத்தார். தஞ்சையில் வைதீக பிராமணர்கள் கூட்டம் போட்டு அவரை திட்டிதீர்தார்கள். அவரை ஜாதியிலிருந்து விலக்கி வைத்தார்கள். அதற்காக அவர் சிறிதேனும் மனம் தளரவில்லை. அந்த படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் முற்போக்கு பிராமணர்களே

சேவா சதனம் என்ற வட இந்தியர் எழுதிய நூலை அம்புஜத்தம்மாள் தமிழில் மொழி பெயர்த்தார்.  அந்த கதை விகடனில் வந்தது – அதை ஜெமினி திரைப்படமாக எடுத்தார் அப்படத்தை இயக்கியவர் சுப்பரமணியம். கதையின் கரு வயதானவருக்கு ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்வதால் அந்த பெண்ணின் மன உளைச்சல் மற்றும் குடும்பத்தில் அவள் படும் வேதனைகள் பற்றியது. இவை தவிர வரதஷ்சனை கொடுமை – பொருத்தமற்ற விவாகம் – பால்ய விவாகம் போன்ற பிற்போக்கான பழக்கங்களை கண்டித்துள்ளார்.

1940 ஆம் வருடம் ” பக்த சேதா” என்ற படம் வெளிவந்தது. இது ஹரிஜனங்கள் தடையின்றி ஆலயப்பிரவேசம் செய்து ஆண்டவனை வழிபட உரிமை உண்டு என்பதை எடுத்துரைக்கும் காவியம். இந்த படத்தைப் பார்த்த பொதுஜனங்கள் மனதில் மாற்றங்கள் தோன்றின.  அவர்கள் ஹரிஜனங்களை வலுக்கட்டாயமாக ஆலயங்களுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். சிலர் அதை சாதித்தும் காட்டினார்கள். இதனால் மேல் கீழ் ஜாதி என்று கலவரங்கள் வெடிக்கத் தொடங்கின. மதுரை – திருநெல்வேலி மாவட்டங்களில் கலவரம் அதிகமானதால் அரசு அப்படத்திற்குத் தடை விதித்தது. சுப்ரமணியம் நீதி மன்றம் சென்று வாதிட்டுப் படத்தை மறுபடியும் வெளியிட்டார். இதில் நடித்த கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பாபநாசம் சிவம் பிராமணர்கள். இதற்கு வசனம் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு.

பின்பு வந்த ”தியாக பூமி” படத்தின் கருத்து தீண்டாமை கொடுமையைக் கண்டித்து திரைக்கதையை அமைத்தார். இந்த கதை கல்கியில் தொடர் கதையாக வந்தது. அப்பொழுதே இதைப் பற்றிப் பல விவாதங்கள் நடந்தன. முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஜமீன்தார்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்து வந்த கொடுமைகளை மையமாகக் கொண்ட ஒரு நாவல். சென்னையில் இப்படம் எட்டு வாரங்கள் ஓடியது. பின்பு அதனால் ஏற்பட்ட எழுச்சியைக் கண்டு ஆங்கிலேய அரசு அப்படத்தை. சென்னை ராஜதானியில் வெளியிடத் தடைவிதித்தது.  நாடு சுதந்திரம் பெற்றபின்தான் அப்படம் மறுபடியும் திரைக்கு வந்தது. இந்த கதையை எழுதிய கல்கி – இயக்கியவர் – பாடல்கள் பாடிய டி.கே.பட்டம்மாள் – அதில் சம்பு சாஸ்திரியாக நடித்தவர் எல்லோரும் பிராமணர்கள். இவ்வாறு காந்தியின் எல்லா சீர்திருத்தக் கொள்கைகளை மக்கள் மனதில் எளிதில் படியும் படி திரைப்படம் மூலம் எடுத்துச் சென்றவர்கள் பிராமணர்கள். அவர்களை எவ்வாறு ஹரிஜன விரோதியாகக் கருதமுடியும் என்பதைத் தலித் மக்கள் சிந்திக்கவேண்டு. இந்த திரைப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு சமூக கருத்தைச் சொல்லும் விதத்தில் பாடல்கள் எழுதப்பட்டது. சில பாடல்களின் ஆரம்ப வரிகள் –

பாரத புண்ணிய பூமி ஜெய பாரத புண்ணிய பூமி…………………

நவசித்தி பெற்றாலும் சிவ பக்தி இல்லாத ………………………….

ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி………………………………………….

தேடி தேடி அலைந்தேனே……………………………………………………

தேச சேவை செய்ய வாரீர்………………………………………………….

சொல்லும் காந்தி தாத்தாவுக்கு ஜே ஜே ஜே………….

கிருஷ்ணா நீ வேகமாய் வராய்…………………………………………….

முனாகால எஸ்.பட்டாபிராமையா ( 15 )

5

My venerable Paternal Grandfather Munagala.S.Pattabhiramaiah – haimavathi.wordpress.com

Munagala.S.Pattabhiramaiah was my paternal grandfather. He was the charismatic freedom fighter of Madurai District. He was the District Board President and was the MLA of Dindigul constituency. He was ostracized by his community for having led the Dalits into the Hindu temples. He was a friend of EVR Periyar  and Mudarignar Rajaji. There are many more facts related to his bravery against the atrocities of the British hegemony and the inhumane caste system of our society

இவரது சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள ”முனாகால” என்ற கிராமம்.  இவர்களது குடும்பம் மதுரை சோழவந்தானில் குடிபெயர்ந்தார்கள். இவர் ஒரு விடுதலை இயக்க தியாகி – பல முறை சிறை சென்றுள்ளார். தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டவர். இவர்களது குடும்பம் வைகை நதிக்கரையில் பொது ஜனங்களுக்கு வசதியாகக் குளிக்க  சில கருங்கல் படித்துறைகளைக் கட்டினார்கள். இவர் வேத சாஸ்திர ஞானம் உடையவர். ஒரு சமயம் காந்தியே வியக்கும் வண்ணம் ஹிந்து தர்ம  சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதாரமே எங்கும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விளக்கிக் கூறினார். இவர் ஐந்து மொழிகளைக் கற்றவர் அதனுடன் துப்பாக்கி சுடும் கலையையும் கற்றறிந்தவர்.

1922 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த ”கொடிப் போராட்டத்திற்கு ” மதுரையிலிருந்த பல தொண்டர்களை அழைத்துக் கொண்டு அவர்களுடன் தானும் சென்று கலந்து கொண்டார். அங்கே கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறை வாசம் அனுபவித்தார். திலகர் மதுரைக்கு வந்த பொழுது விழா ஏற்பாடுகள் முழுவதையும் இவரே ஏற்பாடு செய்தார். இவர் அன்னிபெசண்ட் ” ஹோம் ரூல் ” இயக்கத்திலும் பங்கு கொண்டார்.

காந்தியடிகளின் ஹரிஜன நிதிக்காக இவர் மதுரை முழுவதும் சுற்றித் திரிந்து பல ஆயிரம் ரூபாய் பணமும் சிலரிடம் தங்க நகைகளையும் நன்கொடையாகப் பெற்று காந்தியிடமும் பாராட்டையும் பெற்றார். தமிழகத்தில் நடக்கும் காங்கிரஸ் மாநாடு – பொதுக்கூட்டங்கள் பலவற்றிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். இவரின் பன்மொழி புலமையால் வடநாட்டிலிருந்து வரும் தலைவர்களின் நன்மதிப்பையும் – நட்பையும் பெற்றுக்கொண்டார். இதனால் இவரது பெயர் வட இந்தியாவிலும் பிரசித்தமானது.

1926 இல் இவர் சோழவந்தானில் ஒரு தொண்டர் படையை நிறுவி அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் படையைக் கிராமம் கிராமமாக அனுப்பி அங்கெல்லாம் மக்களுக்கு நாட்டு விடுதலையின் அவசியத்தை எடுத்துச் சொல்லி தேசபக்திக் கனலை மூட்டினார். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்தியக் காங்கிரஸ் ஆகியவற்றின் செயல் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார்.

1932 இல் காந்தி – இர்வின் ஒப்பந்தம் தோல்வியை அடுத்து ஏற்பட்ட போராட்ட களத்தில் இவர் சர்வாதிகாரி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்ட Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருச்சி சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி இவரது அஞ்சா நெஞ்சத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தது. திருச்சி சிறையில் ஒரு அரசியல் கைதியை வார்டன் நையப் புடைத்துவிட்டார். இதனைக் கண்டித்துக் கொதித்து எழுந்தார் பட்டாபிராமையா. சிறை தலைமை அதிகாரியிடம் இவர் வார்டனுக்கு எதிராக முறையிட்டார். அவர் அந்தப் புகாரைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. இதனைக் கண்டித்து சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணா நோன்பு இருக்க இவர் தூண்டினார். சிறையில் கலவரம் மூளும் நிலை ஏற்பட, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குத் தயாராகியது. போலீஸ் துப்பாக்கிக்குத் தனது மார்பைத் திறந்து காட்டி, ஊம்! சுடு என்று இவர் முழக்கமிட்டதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது அங்கிருந்த வடநாட்டு அரசியல் கைதிகள் கங்குலி, சாட்டர்ஜி, கோஷ்குப்தா போன்றவர்கள்  தலையிட்டு  சமாதானம்  செய்து,  நிலைமை மோசமடையாமல் காத்தனர்.

1941 இல் இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவராக ஆனார். இவரது காலத்தில் மதுரை மாவட்டம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி முன்னேறியது. இவர் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1942 இல் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்ட தீர்மானம் நிறைவேற்றியமைக்காக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் கொதித்து எழுந்தபோது, இவர் மதுரையில் ஹர்த்தால் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததோடு, ஜில்லா போர்டு அலுவலகத்தையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் ஹர்த்தாலில் பங்குகொள்ளச் செய்தார். மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஜில்லா போர்டு அலுவலக சாவியை வாங்கி கதவைத் திறக்கும் படியாயிற்று. இவர் சாவியைக் கொடுக்க மறுத்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா? அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா? சொல்ல வேண்டாமா? சும்மா வந்ததா சுதந்திரம்? 1946 இல் இவர் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்யா வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். உத்தம பாளையத்திலிருந்து நாராயணசாமி செட்டியார் வெளியிட்டு வந்த “பாரதி” எனும் பத்திரிகையில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் தேசிய பள்ளிக்கூடம் – பாரதி வாசக சாலை – கைகுத்தல் அரிசி உண்போர் சங்கம் போன்றவற்றை நிறுவினார்

”கள்ளுக்கடை” ”வெள்ளையனே வெளியேறு” போராட்டங்களில் கலந்து கொண்டு கைதுசெய்யப்பட்ட இவர் திருச்சி, அலிப்புரம், பெல்லாரி ஆகிய சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார். இவரது இல்லம் என்றுமே ஹரிஜனங்களுக்குத் திறந்தே இருக்கும் மேலும் சில ஹரிஜன மாணவர்கள் இவரது இல்லத்தில் தங்கி உயர்கல்வி பயின்றார்கள். ஹிந்து சாஸ்திர நூல்களை மேற்கோள்காட்டித் தீண்டாமைக்கு அதில் இடமே இல்லை என்று பல கூட்டங்களில் ஆவேசமாகப் பேசியவர். ஹரிஜன ஆலய பிரவேச நிகழ்வுகளிலும் பங்கு கொண்டவர். இவரது தீண்டாமை ஒழிப்பு பிரசாரத்தைப் பாராட்டி 1965 இல் அரசு தங்கப் பதக்கம் பரிசளித்தது. இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின் அந்த பரிசை நன்கொடையாக அளித்தார்.  மத்திய அரசாங்கத்தின்   தாமிரப் பட்டயம் பெற்றார் . சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டபோது அதனை இவர் வாங்க மறுத்து விட்டார்.  தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம் தனது சுயசரிதை புத்தகத்தை இவர் தலைமையில் வெளியிட்டார். இவர்  1977 இல் இறைவனடி சேர்ந்தார்.

திருச்சி  டாக்டர்  டி.வி.சுவாமிநாத  சாஸ்திரி ( 16 )

மகாத்மா காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதற்காக ”ஹரிஜன சேவா சங்கம் “ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதில் காங்கிரசார் பலர் இணைந்து கொண்டு சேவை செய்தனர். அவர்களுள் ஒருவர் திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்கள். இவர் திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிதலைவராகவும்,  திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

1887 இல் பிறந்தார் – பெற்றோர் வாசுதேவ சாஸ்திரி – கல்யாணி அம்மாள். பள்ளிப்படிப்பை முடித்து  சென்னையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். படிக்கும்போதே காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராய் இருந்தார். திருச்சியில் அவர் தனது மருத்துவ தொழிலை ஆரம்பித்தார். திருச்சி சிங்காரத்தோப்பில் வசித்த அவரது இல்லத்திற்கு ”சத்தியாகிரக விலாஸ்” என்றே பெயர். அவர்  ஹரிஜன சேவா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தீண்டாமையை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். சொன்னதோடு இல்லாமல் திருச்சி தென்னூரில் மல்லிகைபுரம், சங்கிலிச்சேரி ஆகிய இரு தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் தனது மருத்துவமனையைக் கட்டினார். இவரைச் சிலர் சம்பாதிக்க தெரியாதவர் என்றும் பைத்தியம் என்றும் கிண்டல் செய்தனர். இவர் பிராமணர் என்பதால், இவருடைய உறவினர்கள் இவரை சாதிவிலக்கும் செய்தனர். ஆனால் டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்.  மருத்துவ சேவையோடு ஹரிஜனங்களுக்கு இலவச வீடுகள் – தண்ணீர் வசதி – கல்வி கற்க வேண்டிய உதவி  என்று பல தொண்டு காரியங்களையும் செய்தார்.

மேலும் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, விதவைகள் மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1930 இல் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் இவர் மட்டுமல்ல இவரது குடும்பம் முழுவதுமே ஈடுபட்டு அடிபட்டு சிறை புகுந்து சகல கஷ்டங்களையும் பட நேர்ந்தது. இந்த தியாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட இவர் குடும்பத்தின் மற்றவர்கள், இவரது மனைவி கல்யாணி, சாஸ்திரியாரின் சகோதரன் மகன் கணபதி சாஸ்திரி, மகள் சுப்பலக்ஷ்மி, சுப்பலக்ஷ்மியின் கணவர் ராமரத்தினம், இவரது சகோதரரும் பிரபல வக்கீலுமான டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோரும் சிறைசென்ற தியாக சீலர்கள். குடும்பமே நாட்டுக்காக சிறைசென்ற வரலாறு வேறு எங்கும் இல்லை.. சிறை வாசத்தின் போதும் அங்குள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பார்.  அதனால் ஜெயில் வார்டனின் நன்மதிப்பைப் பெற்றார்.  ஆஸ்பத்திரியில் தன்னிடம் வரும் நோயாளிகளைப் பார்க்கும்போதும் கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். 1934 இல் இவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் “களி ராட்டை”என்பதாகும். ஆங்கிலத்தில் அப்போது பிரசித்தி பெற்ற நகைச்சுவை பத்திரிகையான PUNCH போலத் தமிழில் ஒரு நகைச்சுவை பத்திரிகை நடத்த விரும்பினார். டாக்டர் சாஸ்திரி மணிக்கொடியின் தீவிர ரசிகர் அவர் அவ்வாறு மணிக்கொடி தோன்றிய அடுத்த ஆண்டே தொடங்கிய பத்திரிகை களிராட்டை..

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் செய்த ஹரிஜன சேவையைப் பாராட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தங்கத்தினால் ஆன நூல் நூற்கும் தக்ளியையும், தங்கப்  பதக்கத்தையும் கொடுத்துக் கௌரவப்படுத்தினார். 1961 இல் திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டுப் பந்தலுக்கு டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் பெயர் காமராஜரின் உத்தரவுப்படி வைக்கப்பட்டது. சாஸ்திரிக்கு பெரியார், காமராஜர், சத்தியமூர்த்தி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், கல்கி, எஸ்.எஸ்.வாசன், சதாசிவம் ஆகியோருடன் நல்ல தொடர்பு இருந்தது. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் விடுதலை பத்திரிகையில் அவரது சேவையைப் பாராட்டி ” டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் வாழ்க்கை, மக்கள் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவே திகழும் “ என்று குறிப்பிட்டு, ஒரு தலையங்கம் எழுதினார்.

சாஸ்திரி அவர்களின் தொண்டினை நினைவு கூறும் வண்ணம், அவர் வசித்த தென்னூர் பகுதியில் உள்ள ஒரு நீண்ட சாலைக்கு (திருச்சி கோகினூர் தியேட்டரிலிருந்து தென்னூர் மேம்பாலம் வரை -சிப்பி தியேட்டர் இருக்கும் சாலை) சுவாமிநாத சாஸ்திரி சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளியை திருச்சி என்றும், புதுக்கோட்டையைப் புதுகை என்றும் ஊர்ப் பெயர் முதலானவற்றை சுருக்குவது வழக்கம். அதே போல டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலையின் பெயரை மக்கள் குறிப்பிடும் போது சாஸ்திரி சாலை என்றும் கடைக்காரர்கள் S.S.சாலை என்றும் சுருக்கிவிட்டார்கள்.

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காசநோயின் காரணமாக 1946 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19 ஆம் நாள் சிவலோக பிராப்தி அடைந்தார். டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் வாழ்க்கை மக்கள் அனைவருக்கும் ஒர் எடுத்துக்காட்டாகத் திகழும் என்று மகாத்மா காந்தி  சாஸ்திரியின் மனைவிக்கு  எழுதிய இரங்கல் கடிதத்தில் தெரிவித்தார்.

திருச்சி வை.சாமிநாதன் – ( 17 )

6

( Ref : – ntrichy.com )

திருச்சி கீழ் கல்கண்டார் கோட்டை நீர் வளமும் – நில வளமும் மிகுந்த கிராமம்.  இந்த ஊரில் பெரிய பண்ணை என்று வைத்தியநாத ஐயர் குடும்பத்தை அழைப்பார்கள். இந்த பண்ணையில் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பள்ளர்களும் – குடியானவர்களான முத்து ராஜா சமூகத்தினரும் விவசாய கூலிகளாகவும் சிலர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தும் உழவு செய்து வந்தவர்கள். இங்கே புயல் – மழை – வெள்ளம் – நோய் என்ற வந்த போதெல்லாம் ஐயர் பண்ணையின் நெற்குதிர்கள் எல்லாம் பொது ஜனங்களுக்குத் திறந்து விடப்படும். 1932 இல் வைத்தியநாத ஐயர் ராஜாம்பாள் தம்பதியருக்குப் பிறந்த குழந்தையே வை.சாமிநாதன். சாமிநாதன் வளர்ந்து நன்றாக படித்த தட்டச்சு கூடத்தில் சேர்ந்தார். அதன் உரிமையாளர் ஜகன்நாதன் சாமிநாதனுக்கு விடுதலை போராட்ட அவசியங்கள் பற்றியும் – காங்கிரஸ் காந்தியின் கொள்கைகள் பற்றியும் மனதில் படியும்படி சொல்லுவார்.  இதனால் சுவாமிநாதன் மனம் தேசத் தொண்டில் ஆர்வம் கொண்டது.

1952 இல் ஹோமியோபதி மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ஊரில் பிரபலமான அரசியல்வாதி திருமலை சுவாமிநாதனை ஊராட்சித் தேர்தலில் நிற்க வலியுறுத்தினார். காரணம் அவர்கள் குடும்பத்தின மக்கள் தொண்டே. சாமிநாதன் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.  இப்படி 20 ஆண்டுகள் தொடர்ந்து அந்த பதவியில் நல்ல பணிகளைச் செய்தார்.. பின்பு 1966 முதல் 1998 வரை திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் நான்குமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கீழ் கல்கண்டார் கோட்டை திருவெறும்பூர் ஊராட்சி பதவிக் காலங்களில் செய்த தூய நிர்வாகத்தினால் மக்களின் மனதில் அன்பைப் பெற்றார்.

1961 இல் கள்ளர் சமூகத்தினர் ஒன்றிய தலைவர் தேர்தலில் போட்டியிட சாமிநாதன் சுயேச்சையாக நின்று வென்றார். இதற்குத் துணையாகத் திருமலை தன் தம்பி – சிலம்பாட்ட காரன் அருணாசலம் மற்றும் சில ஆஜானுபாகான வாலிபர்களைக் களத்தில் இறக்கியதே காரணம். வெற்றியைக் கொண்டாட ஊர் மக்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதில் கலந்து கொண்ட சாமிநாதன் தீடிர் என தன் சட்டையை கழற்றி மார்பிலிருந்த பூணூலை அறுத்து நான் இன்று முதல் பிராமணன் இல்லை எனக்கு எந்த ஜாதியும் கிடையாது என்று உரக்கக் கூறினார். மக்கள் இதை மிகவும் ஆச்சிரியத்டதோடு பார்த்து திடுக்குற்றார்கள். இந்த செய்தி திருச்சி முழுவதும் பரவி காமராஜர் காது வரை சென்றடைந்தது. பின்பு காமராஜர் அவரை காங்கிரஸ்சில் இணைத்துக் கொண்டார்.

சாமிநாதனின் செயல் திறனைப் பாராட்டி அவர் விரும்பியபடி ( BHEL ) மிகு மின் நிறுவனத்தை திருவெறும்பூரில் நிறுவினார். அதைப்போல் ” சூரியூர் ” துப்பாக்கி தொழிற்சாலையையும் அங்கே நிறுவினார். இதனால் அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகியது. 1967 இல் காமராஜர் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற வேட்பாளராகச் சாமிநாதனை நியமித்தார். திமுக சார்பில் கு.காமாட்சி என்பர் நின்றார். இந்த தேர்தலில் சவாமிநாதனை ஆதரித்து பெரியார் மூன்று கூட்டங்களில் பேசினார். தேர்தலில் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் சுவாமிநாதன் 5000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுரிந்தால் நிச்சயம் சுவாமிநாதனுக்கு ”வேளான் துறை” அமைச்சர் பதவி கிட்டியிருக்கும். இதனால் மனம் தளராமல் மக்கள் பணியைப் பெரிதென எண்ணி தனது மூன்று பொறுப்புகளை ஒருசேர ஏற்று (கீழ் கல்கண்டார் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் – திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் – சட்ட மன்ற உறுப்பினர்) தன் பணியினை தொடர்ந்தார்.

7

அவரது கிராமத்தில் தன் வீட்டில் மட்டும்தான் தொலைப்பேசி இருந்தது. ஆனால் அதை அவசரத்திற்கு மக்கள் தடையின்றி இலவசமாக பயன்படுத்த அனுமதித்தார். இதற்கிடையில் இலவச மருத்துவ பணியையும் செய்து வந்தார். 1968 இல் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் (கரூர் – பெரம்பலூர் – அரியலூர்) காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். 1986 வரை இந்த பொறுப்பைத் திறம்பட நடத்தினார்.

இவரது சிபாரிசால் பல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ( BHEL  – OFT  – டால்மியா – கரூர் சிமெண்ட் ) போன்ற தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிட்டியது. கக்கன் திருச்சி வரும்பொழுதெல்லாம் தன் சகோதரன் சாமிநாதன் என்று சொல்லி அவர் வீட்டில்தான் தங்குவார். 1991 ஆண்டு தேர்தலில் சின்டிகேட் காங்கிரஸ் சுவாமிநாதனை மறுமுறை தேர்தலில் நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்று நம்பியிருந்தார்கள். ஆனால் இந்த முறை திருமலையின் தம்பி திமுக வேட்பாளரை ஆதரித்தார். இதனால் சுவாமிநாதன் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் சுவாமிநாதனுக்குப் பிரசாரம் செய்த சௌ.சண்முகம் என்பவர் எழுதிய தெம்மாங்குப் பாட்டு வெகுவாக மக்களைக் கவர்ந்தது.

என்னத்த செய்தாரு அய்யாரு

என்னத்த செய்தாரு……………

எல்லாம் செஞ்சாரு அய்யாரு

எல்லாம் செஞ்சாரு……….

பாலங்கள் பல காட்டுனாரு

குடிக்க நல்ல பை போட்டாரு

நடந்து போக நல்ல ரோடு போட்டாரு

இருட்டை விரட்ட லைட்டு போட்டாரு

புள்ளைங்க படிக்கப் பள்ளிகூடம் கட்டினாரு

(என்னத்த செய்தாரு அய்யாரு …………………………………)

ஓட்டு போடுங்க

மக்களே அய்யாருக்கு

ஓட்டு போடுங்க

சுவாமிநாதன் தேர்தல் தோல்வியால் மிகவும் வேதனை அடைந்தார்.  தான் தோற்றதைவிடத்  தான் செய்துவந்த மக்கள் பணி தடைபட்டுவிட்டதே என்று மனம் வருந்தினார். அவரது தோல்விக்குக் காரணங்கள் பல – அவை காங்கிரஸ் உடைந்தது – கலைஞர் சுவாமிநாதன் அதிக வாக்குகள் பெற்ற மணிகண்டம் பகுதியை திருவெறும்பூர் சட்டமன்ற எல்லையிலிருந்து எடுத்து ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியுடன் இணைத்தது – தனது வலக் கரமாக இருந்த திருமலையின் தம்பி திமுக விற்கு ஆதரவாக இருந்தது – 1955 முதல் அந்த ஊரின் அழகு நாச்சியார் கோவில் பொது திருவிழா ஊர்வலம் ஹரிஜன தெருக்கள் வழியாக எடுத்து செல்லக்கூடாது என்ற சில ஊர் பெரியவர்கள் பிடிவாதத்தால் நடைபெறாமலும் இருந்தது. அப் பெரியவர்களுடன் சுவாமிநாதனின் அண்ணன் நட்புடன் இருந்தை ஏன் சுவாமிநாதன் தடுத்து திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யவில்லை என்ற பிரசாரமும் சேர்ந்து தோல்வியைத் தந்தது.  காமாராஜருக்குப் பின் மூப்பானாருடன் இந்திரா காங்கிரஸ் – பின் மூப்பனார் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். எதிர்க் கட்சிகளுடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டவர். கலைஞர் திருச்சி வரும் போதெல்லாம் சங்கம் ஹோட்டலில்தான் தங்குவார்.  சாமிநாதன் வந்தால் நான் யாருடன் இருந்தாலும் அவரை தடுக்காமல் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று ஒரு நிரந்தர கட்டளையிட்டார் என்பதிலிருந்து அவரது நல்ல தொண்டு மனதை நாம் புரிந்து கொள்ளலாம்

8

1984 இல் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கவேண்டும் என் எண்ணினார் ஆனால் சிவாஜி ரசிகர்கள் அடைகலராஜ் என்பவரே முன்மொழிந்தார்கள். இதற்குக் காங்கிரஸ் உடைந்து ஒற்றுமை இல்லாமையே காரணம். ஆனால் தொடர்ந்து ஊராட்சி தேர்தலில் கடைசிவரை அவர் வென்றார். தமிழ் நாடு அரசு அமைத்த பஞ்சாயத்து கமிஷன் உறுப்பினராக இருந்தார். பெல் தொழிற்சங்க தலைவர் – பல்வேறு தொழிற் சங்கங்களுக்கு ஆலோசகர் – விவசாய மன்ற பொருப்பாளர். என்று பல பதவிகளை அலங்கரித்து தன்நிகர் அற்ற மக்கள் தொண்டை செய்தவர். குறிப்பாக தாழ்த்தப் பட்டவர்களுக்காக முழு மனதுடன் சேவை செய்தார். 1998 இல் இறைவனடி சேர்ந்தார்.

எஸ்.ஆர்.வேங்கடராமன் ( 18 )

9

கோபாலகிருஷ்ண கோகலே 1905 ஆம் ஆண்டு ”இந்திய ஊழியர் சங்கம் ” ( The Servants of Indian Society ) என்ற தொண்டு நிறுவனத்தைப்  பம்பாயில் தொடங்கினார்.  இச்சங்க உறுப்பினர்கள் ”சமூகத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவேன்” என்ற உறுதி மொழியை ஏற்கவேண்டும். இந்த சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து  56 வருடங்கள் அயராது சேவை செய்தவர்தான் எஸ.ஆர்வேங்கடராமன்.

இவர் கோவை சிங்கநல்லூரில் 1887 ஆம் ஆண்டு மார்சு 17ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் ராமகிருஷ்ண ஐயர் – கிருஷ்ணவேணி அம்மாள்.  கோவையில் படிப்பை முடித்து சென்னையில் சட்டம் படித்து கோவையில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் அவர் மனதில் வெகுநாளாக இருந்து வந்தது. ஒரு சமயம் ஜோஷி – ஜி.கே.தார் போன்ற பல தலைவர்கள் சமூகப்பணிக்காகக் கோவை நகரத்திற்கு வந்தார்கள். அவர்களை வேங்கடராமன் சந்தித்து உரையாடியது அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தனது வக்கீல் தொழிலை உதரிதள்ளிவிட்டு ”இந்திய ஊழியர் சங்கத்தில்” 1929 இல் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பழங்குடியினர் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பது – அதிக வேலை குறைந்த கூலி என்று சுரண்டுவது – பழங்குடி பெண்களைப் பலாத்காரம் செய்வது – அவர்கள் இருப்பிடங்களைப் பிடுங்குவது போன்ற இன்னல்களைச் சந்தித்து அவற்றை எதிர்க்கும் திராணி அற்றவர்களாக இருந்தார்கள் என்பதை வேங்கடராமன் நன்றாக அறிவார்.

முதலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் அறியாமையைப் போக்கக் கல்வி முக்கியம்  என்பதை உணர்ந்த வேங்கடராமன் அவர்களுக்கான  கல்விக்கூடங்களைத் தொடங்கினார். தோடர் – கோடர் பழங்குடியின குழந்தைகளுக்காக ஊட்டியில் ”நீர்காசிமண்டில்” தக்கர் பாபா குருகுலம் ஒன்றை நிறுவினார். ஏனாதி பழங்குடியினருக்காக ”சில்லக்கூர் சர்விண்டியா” பள்ளிக்கூடம். கேரளத்தில் கோழிக்கோடு – மலப்புரம் பகுதிகளில் வாழும் பனியன் – காட்டுநாயகன் பிள்ளைகளுக்காக ”தேவதார்” பள்ளிக்கூடம். இந்த இடைநிலை பள்ளிக்கூடங்களை வேங்கடராமன் நடத்தினார். ” பாரத பழங்குடியகள் ” என்ற நூலை வேங்கடராமன் எழுதினார். அதில் பழங்குடிகள் அவலநிலையைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். மங்களூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைத்து நடத்திய நடுநிலை பள்ளிக்கூடத்தில் செயலாளராக 1942 முதல் 2 ஆண்டுகள் பணி செய்தார்.

அவர் சென்னை ஹரிஜன சேவா சங்கத்தின் செயலராகவும் பணி செய்தார். தாழ்த்தப் பட்டவரகளுக்கு வேண்டிய உதவிகளை விளம்பரம் இல்லாமல் செய்து வந்தார். ”காலங்காலமாக ஹரிஜனங்கள் ” – ” ஆலயப்பிரவேச சட்டம்” என்று இரு ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார். 1929-30 ஆம் ஆண்டுகளில் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கீழ்த் தட்டு மக்கள் வீடுகளை இழந்தார்கள். அச்சமயத்தில் வேங்கடராமன் அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிதர ஏற்பாடுகளைச் செய்தார். 1934-35 இல் சீர்காழி பகுதி புயலால் வெகுவாக சேதம் அடைந்தது.  பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரண பணிகளை செய்து கொடுத்தார். அதைப்போல் 1962 இல் திரும்பவும் சீர்காழி புயலின் தாக்கத்திற்கு உள்ளானது. அப்போது அங்கே இடிந்து விழுந்த இரண்டு ஹரிஜன பள்ளிக்கூடங்களை மறுபடியும் கட்டிக்கொடுத்தார்.

1978 இல் உத்திரபிரதேசத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் 1979 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஒரு நீர்த்தேக்கம் உடைந்து வெள்ளம் ஏற்பட்ட போதும் வேங்கடராமன் இந்திய ஊழியர் சங்கம் சார்பில் நிவாரண பணிகளை மேற்கொண்டு செவ்வனே செய்து முடித்தார். 1952 இல் தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குச் சென்று நிவாரண பணிகளைச் செய்த முடித்தார். 1978 இல் வேங்கடராமன் இந்திய ஊழியர் சங்கத்தின்” தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது அயராத தாழ்த்தப்பட்டவர்கள் – பழங்குடியினரது தொண்டினைப் பாராட்டி 50 மேற்பட்ட சேவை நிறுவனங்கள் கொளரவித்தன். அவரும் 40 மேற்ப்பட்ட தொண்டு நிறுவனங்களி்ன் பொறுப்புக்களை ஏற்று  இறுதி வரை பணிசெய்த உன்னத சமூக சேவகர்.  அவர் பம்பாயில் 30.12.1985 ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.. அவரது மறைவிற்குப் பல பெருந்தலைவர்கள் இறங்கல் செய்திகளை அனுப்பினார்கள். இந்திய ஊழியர் சங்கம் வெளியிட்ட ஆங்கில இறங்கல் செய்தியின் சில வரிகள்.

Shri.S.R.Venkataram joined the society in 1929 and during his 56 years of membership of the society he worked ceaselessly in various fields of public activity, political, social, educational and cultural.  He was commissioner of Scout at Madras, Secretary of Depressed Classes Mission (Mangalore), Assistant Secretary of the All India Harijan Sevak Sangh, Hon.Secretary of the Indian Council of World Affairs (Madras Branch), Vice President of the Indian Conference of Social work, Vice President of the Guild of Service, Madras.

He wrote many books in Tamil & English.  Among these are Grandpapa Gandhi’s Story, Dr.M.G.Ranade, Dr.Annie Besant, Tribes of India, What is Indian Scouting etc., He translated “Jawaharlal Nehru’s Letters to his Daughter” in Tamil, which was prescribed as a text book by the Madras University. Every year, he brought out “Gokhaleana” and “Sastriana”.  Shri.Venkataraman was elected President of the Servants of Indian Society in June 1978.  In his death the Society has lost a sincere and dedicated Member.

ஆக்கூர் அனந்தா சாரியார் ( 19 )

10

இவர் ஒரு தீவிர சுதந்திரப் போராட்ட வீரர். பல முறை சிறை சென்றுள்ளார். தலைசிறந்த எழுத்தாளர். தீனபந்து ஆஸ்சிரமத்திற்கு ராஜாஜி அடிக்கல் நாட்ட வந்த பொழுது அவரிடம் ரூபாய் 1000 நன்கொடையாக அளித்தார். அங்குப் பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி சொல்லிக் கொடுத்தார். தீண்டாமை கொடுமையை எதிர்த்தவர். 1968 இல் நீலன் சிலை அகற்றும் போராட்டம் பற்றி ” அரசியல் நினைவு அலைகள்” என்ற புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார்.  இவரை பாரதியின் சீடர் என்றே சொல்லலாம். பாரதியைப் பின்பற்றும் எவரும் சாதி வேறுபாடு காட்டமாட்டார்கள். பாரதியை பற்றியும் எழுதியுள்ளார். ” ராஜாஜி சரிதம் ” என்ற புத்தகத்தையும் – தியாகராஜர் மற்றும் அவர் கீர்த்தனைகள் பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ( 20 )

11

திரு வேங்கிமலை சேஷ சௌந்தர ராஜன் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார் (1880-1953 ) திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் மருத்துவம் பயின்று இரங்கூன் சென்று மருத்துவ தொழில் செய்தார். பின்பு லண்டன் சென்று மருத்துவ மேல் படிப்பு பயின்று திரும்பவும் பர்மாவில் சில காலம் மருத்துவ தொழில் செய்தார். பின்பு இந்தியா திரும்பி ”ராஜன் மருத்துவ மனையை” நிறுவினார். தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்தார். ஹரிஜன சேவையில் தீவிரம் காட்டியவர். ஹரிஜன  ஆலயப்பிரவேச மாநாடு மதுரையில் நேருவின் உறவினர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் ராஜன்.  ராஜாஜியுடன் நல்ல நட்பைக் கொண்டிருந்தார்.  இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் – ரௌலட் சட்ட எதிர்ப்பு – உப்பு சத்தியாகிரகம்- போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். 1937 இல் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் – சுகாதார அமைச்சராகப் பணி செய்தார்.

இவர் கடல் கடந்து படிக்கச் சென்றதாலும் – தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் முதல் தலைவர் பொறுப்பை ஏற்றதாலும் ஜாதி விலக்கல் செய்யப்பட்டார். இதனால் அவர் வாழ்கையில் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. இதைப்பற்றி தனது சுயசரிதை ”நினைவு அலைகள்” என்ற நூலில் தனது சாதி விலகலால் எதிர்கொண்ட இன்னல்களை நகைச்சுவையுடன் எழுதினார். இதைத் தவிர ”தமிழ் நாட்டில் காந்தி” – வ.வே.சு.ஐயர் – வீட்டு வைத்தியர் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக