பிராமண வெறுப்புணர்வு (புனைவும் உண்மையும்) Part – 10

வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? – சோ- 11 – சித்தர்கள்முதல் சினிமாதயாரிப்பாளர்கள்வரை

தமிழ்த் தொண்டு, தமிழர் வரலாறு பற்றிய ஆராய்ச்சி, பத்திரிகைப் பணி, திரையுலகப் பணி. என்று பலதுறைகளிலும் தன்னலம் பாராமல் உழைத்த பல பிராமணர்களில், சிலர் பெயர்களைப் பார்ப்போம் …

‘அவர் இல்லையேல் தமிழ் மொழியில், பக்தி இலக்கியத்திற்கு முந்தைய பேரிலக்கியங்கள் இல்லை’ என்று தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் கூறுகிற வகையில், தமிழ்த் தொண்டாற்றிய டாக்டர் உ.வே. சுவாமி நாத ஐயர் ஒர் அந்தணர்.  தமிழ் என்றதும் உ.வே.சா நினைவே முதலில் எழுகிறது. இவரே முதலில் தோன்றுகிறார். அதற்கு முன் திருக்குறளைத் தவிர, நமக்கு வேறு ஒரு நூல் தெரியுமா ?

பக்தி நூல்களைத் தாண்டி பெருநூல்களைப் பற்றி  கேள்விப் பட்டிருக்கிறோமா?  இவர் தோன்றவில்லையேல் பதினெட்டாம் பெருக்கிலும். புனலிலும், கனலிலும், கரையானாலும் அன்றோ ‘நம்’ பழந்தமிழ் செல்வங்கள் அழிந்து போயிருக்கும். ‘அழியாது காத்த அண்ணல்’, ‘தமிழ் காத்த தெய்வம்’ ,  ‘தண்டமிழ் இலக்கியம் வழங்கிய வள்ளல் உ.வே.சா’ என்று தமிழ் இலக்கிய வரலாறுக் களஞ்சியம் குறிப்பிடுகிறது. ஊர் ஊராய்ச் சென்று செல்லுக்கும், கரையானுக்கும் இரையாகிக் கொண்டிருந்த தமிழ் ஒலைச் சுவடிகளையெல்லாம் திரட்டி வந்து அவற்றை திருத்தமான முறையில் பதிப்பித்தவர் உ.வே.சா .

பதிப்புரை ஆராய்ச்சி, சொற்பொழிவு, செய்யுள், மொழி பெயர்ப்பு, சமயம் மொழியியல், நூல் இயற்றல், இதழ் ஆசிரியர் பணி, பாடம் பயிற்றல், ஏடு திரட்டல், வரலாறு, இலக்கியம் என்று பலதுறைகளில் முன்னோடியாகப் பணியாற்றிய ரா.ராகவ ஐயங்கார் ஓர் அந்தணர்.

ரா.ராகவ ஐயங்கார்            மு. ராகவையங்கார்

பல நூல்களைப் புதுப்பித்து தமிழ் ஆராய்ச்சித் துறையில், பெரும்பணியாற்றிய ஈ.வை அனந்தராமய்யர் ஒர் அந்தணர். தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு வழி அமைத்துத் தந்தவர்களில் முக்கியமானவராகிய மு. ராகவையங்கார், ‘உரையாசிரியச்சக்கரவர்த்தி’ என்று புகழப்படுகிற வை.மு . கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஓர் அந்தணர் . தேசபக்தி, பெண் விடுதலை, ஜாதி பேதமின்மை போன்ற பல திசைகளில் தனது ஞானத்தீயை பரப்பி கவிதைகளை இயற்றி, கட்டுரைகளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்த பாரதியார் ஒரு அந்தணர்.

திராவிடக் கவிமணி’ வே.முத்துசாமி ஐயர்

‘திராவிட கவிமணி’ என்று பாராட்டப்பட்ட வே.முத்துசாமிஐயர், (சமஸ்கிருதத்தில் இருந்த பரமேசுவர தோத்திரத்தை, தமிழில் தெளிவாகப் பாடியதற்காக “கஜாரண்யதிராவிடக்கவிமணி’ என்ற பட்டத்தைப் பெரியவர் கொடுத்தார்!”) கவி யோகி என்று போற்றப்பட்ட சுத்தானந்த பாரதியார் , வைக்கம் போராட்டத்தில் சிறை சென்ற சா.து.சி யோகியார் ஆகிய அந்தணர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு மிகப் பெரிது. ஜாதி வேறுபாடுகளை எதிர்த்து எளிமையாக வாழ்ந்து சமுதாய மேம்பாட்டிற்காக உழைத்த சித்தர்களில் பல அந்தணர்கள் உண்டு. அவர்களில் திருமாளிகைத்தேவர், பாம்பாட்டிசித்தர், கரூர்சித்தர்போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘தமிழ்க் காப்பியங்கள்’ என்ற ஆய்வு நூலை எழுதியவரும், பன்னிரு திருமுறைகளுக்கும் அரும் பொருள் வழங்கியவரும், தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் கலைமகள் பத்திரிகையை நடத்தியவரும் ஆகிய ‘வாகீச’ கலாநிதி கி.வா. ஜகந்நாதன் ; 1901-ல் மதுரை தமிழ்ச் சங்கம் அமைத்த ஞானியாரடிகள்;  பல அரிய நூல்களை எழுதிய பி.ஸ்ரீ ஆச்சார்யா ; அறிவியல் தகவல்களை யெல்லாம் எளிய தமிழில் கொண்டு வருவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த பெ.நா. அப்புஸ்வாமி, கம்பராமாயணத்தை விளக்குவதில் புகழ்பெற்ற சி.ஜெகந்நாதாச்சாரியார்; அரிய இலக்கண விளக்க நூல்களை எழுதிய கலா நிலையம் ராஜகோபால் சாஸ்திரி;  பல கவிதை நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவரும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் முதல்வராகப்  பணியாற்றி யவருமாகிய பேராசிரியர் ஆ .சீனிவாச ராகவன் ;  பாரதி நூல்கள் பற்றிய ஆராய்ச்சியில் பெரிதும் பாடுபட்டரா.அ.பத்மநாபன், மற்றும் சீனி விசுவநாதன்… போன்ற அந்தணர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டு சாதாரணமானதல்ல.

தேசபக்தியைப் பரப்புவதிலும், ஜாதி வேறுபாடுகளைக் களைவதிலும், தீண்டாமை ஒழிப்பிலும், மதுவிலக்கைப் பரப்புவதிலும், பெண்கள் உயர்வுக்காக பாடுபடுவதிலும், முன் நின்றவர்களில் பல பிராமணர்கள் உண்டு. தமிழ் பத்திரிகை உலகின் தந்தை என்று கருதப்படுகிற ஜி. சுப்ரமண்ய ஐயர், இக்காலஒளவையார்என்றுதிரு.வி.க. வால்பாராட்டப்பட்ட பண்டிதை அசலாம்பிகை அம்மையார் ;  தேசபக்தன் இதழின் ஆசிரியராக இருந்த வ.வே.சு ஐயர் ;  ஹரிஜன சேவையில் பெரிதும் ஈடுபட்ட சீர்திருத்த வாதி வ.ரா ; வெ .சாமிநாத சர்மா ;  மது விலக்கு , ஹரி ஜன முன்னேற்றம், நாட்டு விடுதலை,  இளம் விதவைகளின் விவாகத்துக்கு ஆதரவு என்று பல முனைகளில் தனது எழுத்தைச் சுழற்றி, சமூகசேவை புரிந்த கல்கி ; சங்கு சுப்ரமண்யம்,  சங்கு கணேசன்….. ஆகியோரும் அந்தணர்களே.

சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லும் அளவுக்கு தேச பக்தியைப் பரப்புவதில் ஈடுபட்டவரும்,  மிகக் கடினமான பொருளாதார விஷயங்களையும் எளிமையான தமிழில் அனைவருக்கும் புரியும் படியாக எழுதியவரும், ஒரு தினசரி பத்திரிக்கை என்றால் ,அது இப்படித்தான் நடத்த படவேண்டும் என்று காட்டியவருமான ஏ.என் சிவராமன் மற்றும் ஏ.வெங்கடாச்சாரியார், என். ராமரத்தினம் போன்ற அந்தணர்கள் தமிழுக்கும், தமிழகத்துககும் பெரும் சேவை செய்தவர்கள்.  தேசியவாதிகளின் படைப்புகளை மக்களுக்குக் கொண்டு செல்வதை ஒரு புனிதக் கடமையாக நினைத்து, பதிப்பகத் தொழிலை நடத்திய அல்லயன்ஸ் கம்பெனியின் அதிபர்கள் பிராமணர்கள்.

ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை வலியுறுத்திய பாலயோகினி, தீண்டாமை ஒழிப்பை வற்புறுத்திக் கூறிய மாலபில்லா, சமுதாய சீர்திருத்தத்தைப் பேசிய சேவாசதனம், தேசபக்தியைப் பரப்பிய தியாக பூமி… ஆகிய படங்களையெல்லாம் துணிந்து பிரிட்டிஷாரின் காலத்திலேயே தயாரித்த டைரக்டர் கே. சுப்ரமண்யம் ஓர் அந்தணர். சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதுவதை ஒரு கடமையாகக் கருதி பணியாற்றிய வை.மு. கோதைநாயகி பிராமண வகுப்பைச் சார்ந்தவர். லாப நோக்கம் என்பதை தமிழுக்குச் செய்கிற சேவையாக  நினைத்து ஒளவையார் படத்தைப் பெரும் செலவில் துணிந்து தயாரித்து வெளியிட்ட எஸ்.எஸ் .வாசன் ஓர் அந்தணர். நந்தன் சரித்திரத்தை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதி ஒரு அந்தணர்.

தமிழிசைக்கு பெரும் பணியாற்றிய பாபநாசம் சிவன், ஒரு பிராமணர். (தமிழிசையை பரப்புவதில் பெரும்பங்கு வகித்தவர்களில், கல்கி முதன்மையானவர் என்பதும் நினைவில் வைக்கத்தக்கது.) தமிழகத்தின் வரலாறு பற்றியும், அதன் பழம் பெருமைகள்பற்றியும் இப்போது பலரும் பேசுகிறார்கள்.ஆனால் அந்தப் பழமையான வரலாற்றை ஆராய்ச்சி செய்து வழிப்படுத்தியவர்களில் பிராமணர்களே தன் கைப்பொருளைச் செலவு செய்து, பல இடங்களுக்கும் சென்று கல்வெட்டுக்களையும், செப்புப் பட்டயங்களையும் கண்டுபிடித்து சரித்திர நுட்பங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய து.அ.கோபிநாத ராயர் ஒர் அந்தணர். பாண்டித்துரை தேவர் கேட்டுக் கொண்டதால், சோழ வம்ச சரித்திர சுருக்கம் எழுதியவர் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பி.டி. சீனிவாச ஐயங்கார்

தமிழர்களின் சரித்திரம் என்ற ஆங்கில நூலை எழுதிய பி.டி. சீனிவாசஐயங்கார்ஓர்அந்தணர்.  சங்க கால சேர மன்னர்கள் என்ற அரிய படைப்பை அளித்த கே.ஜி. சேஷய்யர் ஒர் அந்தணர். சென்னைப் பல் கலைக் கழகத்தின் வரலாற்று ஆராய்ச்சித் துறையில் முதல் பேராசிரியரான டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் என்கிற அந்தணர் பற்றி, ‘இவர் தென்னக வரலாற்று வித்தகர்; அதனை முறையாக எழுதிய மூலவர்,  உண்மை பல கண்ட முதல்வர்’  என்று தமிழ்  இலக்கிய வரலாற்றுக்  களஞ்சியம் கூறுகிறது .  தென்னிந்திய வரலாறு, சோழர் பாண்டியர் அரசு, விஜயநகர அரசு முதலிய 22 ஆராய்ச்சி நூல்களும் , 160  கட்டுரைகளும் எழுதி, இந்திய வரலாற்று ஆசிரியர்களுள் சிறந்தவர் என்று தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் கூறுகிற நீலகண்ட சாஸ்திரி ஓர் அந்தணர்.

நீலகண்ட சாஸ்திரி

‘உண்மையான வரலாற்றை சீனிவாச ஐயங்காருக்கு பின் விரிவாக வெளியிட்டவர், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்  பேராசிரியராக இருந்த ராமசந்திர தீட்சிதரே என்று தேவநேயப் பாவணாரால் பாராட்ட பட்ட  வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் ஒர் அந்தணர்.

பலராலும் பாராட்டப்பட்ட இந்திய வரலாறு என்ற நூலை எழுதிய ஆர்.சத்தியநாத ஐயர் ஒர் அந்தணர். தங்கள் தொழிலை ஒரு புனிதமான கடமையாக  நினைத்து பணியாற்றிய டாக்டர்கள், மிக நுட்பமான சட்டங்களை ஆராய்ந்து விளக்கங்களைத் தரக்கூடிய வக்கீல்கள், சிறிதும் நேர்மை மாறாத நீதிபதிகள் மாணவர்களைத் தங்கள் பிள்ளைகள் போல் கருதி அக்கறையுடன் கல்விபோதித்த ஆசிரியர்கள் – சமுதாயத்தின் பல பிரிவுகளிலும் இருந்திருக்கிறார்கள் இவர்களில் பிராமணர்களும் நிறையவே உண்டு. இப்படி எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சிறப்புறப் பணியாற்றி மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதில் மற்றவர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்களாக விளங்கிய பிராமணர்கள் எப்படி வெறுக்கத்தக்கவர்கள் ஆவார்கள் ?

வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? – சோ- 10 – பிராமணர்களின் தமிழ்த் தொண்டு !

தேச விடுதலைப்போராட்டத்திலும், சமுதாயப் பணியிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டு பல தியாகங்களைப் புரிந்த உன்னதமான மனிதர்களில் கணக்கற்ற பிராமணர்களும் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்த்தோம். தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதிலும் பிராமணர்கள் மற்றவர்களுக்குச் சளைத்தவர்களாக இருக்கவில்லை என்பதற்குச் சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

எப்படி தேச விடுதலை, சமூகத் தொண்டு ஆகியவற்றில் பல்வேறு மதத்தினரும் ஜாதியினரும் பெரும் பங்காற்றினார்களோ அதே போல் தமிழ் தொண்டிலும், தமிழ் வளர்ச்சியிலும் பல்வேறு ஜாதிகளைச் சார்ந்தவர்களும், மதங்களைச் சார்ந்தவர்களும் பங்கேற்றார்கள். அவர்களில் பிராமணர்களுக்கும் மிக முக்கியமான இடம் உண்டு.

சங்க இலக்கியங்கள், கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான காலத்தில் இயற்றப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சங்க இலக்கியப் புலவர்கள் வரிசையில் பல பிராமணர்கள் இடம் பெற்றிருந்தனர். ‘புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்’ என்று புகழப்பட்ட மாபெரும் புலவராகிய கபிலர் ஓர் அந்தணர். சங்க இலக்கியங்களாகத் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் கபிலருடைய பாடல்கள்தான் எண்ணிக்கையில் முதல் இடம்பெறுகின்றன.

வரலாற்றுப் புலவர் என்று புகழப்படுகிற சங்க காலப் புலவராகிய மாமூலனார் ஓர் அந்தணர்.  மற்றொரு அந்தணர் உருத்திரங்கண்ணனார் என்பவர் பெரும்பாணாற்றுப் படையும், பட்டினப் பாலையும் இவர் பாடியவை. இவர் பாடிய பட்டினப்பாலையில் வானநூல் கருத்துக்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்து இலக்கியங்களைப் படைத்த அந்தணப் புலவர்களில் இவர்கள் ஒரு சில உதாரணங்கள்.

சைவத்தையும், தமிழையும் ஒருசேரப் பரப்பியவர்களிலும் அந்தணர்கள் உண்டு.  பிள்ளை பாதி, புராணம் பாதி என்று பெரிய புராணமே சிறப்பிடம் தருகிறபடி அமைந்த வரலாற்றுக்குரியவர் திருஞானசம்பந்தர்.  அவர் இயற்றிய தேவாரம், தமிழ் இலக்கியத்தில் மகுடமாகத் திகழ்கிறது. அந்தணர் மரபில் வந்த சுந்தரர் பாடிய தேவாரம் ஏழாவது திருமுறையாக அமைந்துள்ளது.பெரிய புராணத்திற்கு அடிப்படையான திருத்தொண்ட தொகை இவர் பாடியது. திருவாதவூரில் ஆதிசைவ அந்தணர் மரபில் பிறந்த மாணிக்கவாசகர்  திருவாசகம் பக்தி இலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது.

தமிழகத்தில் சைவ சமயத்தை நிலை நிறுத்தி வளர்த்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர், மாணிக்கவாசகர் – ஆகிய நால்வரில் மூவர் அந்தணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையாக திரு விசைப்பாவும், திருப்பல்லாக்கும் இடம்பெறுகின்றன. இவற்றைப் பாடியவர்களில் திருமாளிகைத் தேவர், புருடோத்தமன் நம்பி, பூந்துருத்தி காடவை நம்பி ஆகியோர் அந்தணர்கள்.

தமிழ் வியாசர் என்று புகழப்பட்ட நம்பியாண்ட நம்பிகள் என்கிற அந்தணர் திருத்தொண்ட திருவந்தாதி பாடியவர்.

வேம்பத்தூர் கவுனிய கோத்திர சோழிய அந்தணரான பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் தான் முதலில் திருவிளையாடல் படைத்தவர். இதுவே பழைய திருவிளையாடல் எனப்படுவது.  மதுரை தலத்தின் வரலாறு அறியப்படுவதற்கு இந்நூல்கள் நெடுங்காலம் வரை மிகவும் உதவியாக இருந்தது எனக் கூறப்படுகிறது.

பின்னர் பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணத்தை இயற்றினார். அவர் ஆதிசைவ அந்தண குலத்தில் பிறந்தவர். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிற காளமேகப் புலவர் ஒர் அந்தணர். வைணவ இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் – தமிழில் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்களைப் படைத்தவர்கள் ஆழ்வார்கள். இவர்களில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அந்தண குலத்தில் பிறந்தவர்  பெரியாழ்வார்.

திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் இவர்பாடியவை. பிள்ளைத்தமிழ் என்று பிற்காலத்தில் வர்ணிக்கப்பட்ட சிறு பிரபந்த வகையைத் தோற்று வித்தவர் பெரியாழ்வாரே !. கருங்கல்லையும் கரைய வைக்கும் வல்லமை படைத்த பாடல்களை இயற்றிய தொண்டரடிப் பொடியாழ்வார் ஒர் அந்தணர். நம்மாழ்வாரின் பிரபந்தங்களைப் பல இடங்களிலும் பிரசாரம் செய்தவர் மதுரகவிகள் ;  இவரது பாடல்கள் மதுரமாக இனித்ததால், மதுரகவிகள் ஆழ்வார் என்று பெயர் பெற்றுத் திகழ்ந்த இவர் ஒர் அந்தணர்.

நாதமுனிகளும், ஆளவந்தாரும், வைணவ ஆச்சார்யார்களாகத் திகழ்ந்த அந்தணர்கள். பிற்படுத்த பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் தூக்கி  விடுவதை தனது லட்சியமாகக் கொண்டு இயங்கி பெரும் பணியாற்றிய ராமானுஜர் ஒரு அந்தணரே !. ‘ஆன்மீகத்தின் கதவுகளை அனைவருக்கும் திறந்து விட்ட ராமானுஜருடைய கருணைப் பெரும்  செயல் , மகத்தான சிறப்பு வாய்ந்தது என்று ஸ்வாமி விவேகானந்தரே இவருடைய பணியைப் பாராட்டி  யிருக்கிறார். ராமானுஜரை விட உயர்ந்த சமூக சீர்திருத்த வாதி,தமிழகத்தில் பிறக்கவில்லை என்று சொல்வோரும் உண்டு.

மிகப் பெரிய பணக்காரராக இருந்து,  பின்னர் பெரும் ஞானம் பெற்று செல்வத்தைத் துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்தவர் கூரத்தாழ்வார். அவருடைய மகன்களாகிய பராசர பட்டர், வியாச பட்டர் ஆகியோரும் அந்தணர்களே. இப்படிப்பட்டவர்களை விடுத்து அடுத்த கட்டத்திற்கு வந்தால் -தமிழில் பாரதத்தை இயற்றிய வில்லிப்புத்துராரும் கந்த புராணம் பாடிய காஞ்சிபுரம் கச்சியப்ப சிவாச்சாரியாரும் அந்தணர்களே.

சைவ சித்தாந்த சாத்திரங்களில் முக்கிய இடம் பெற்ற ‘இருபா இருபஃது’ என்ற நூலை இயற்றிய பெரும் பண்டிதரான அருள்நந்தி சிவாச்சாரியார் ஓர் அந்தணர். எட்டு சைவ சித்தாந்த சாத்திரங்களை இயற்றிய உமாபதி சிவாச்சாரியாரும் ஓர் அந்தனரே !

தமிழிலும் நூல்கள் இயற்றி, சைவ பரம்பரையில் வடமொழியிலும் நூல்கள் இயற்றியவர் சிவாக்கிர யோகிகள் என்கிற அந்தணர். தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து இடம் பெற்றவர் என்று கூறப்படுகிற வீரை – கவிராச பண்டிதர் ஓர் அந்தணர். ‘தமிழில் உள்ள பெருமைக்குரிய அருமையான அத்வைத  வேதாந்தப் பெருநூல்’ என்று  இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் குறிப்பிடுகிற வகையில் அமைந்த நூலை இயற்றிய வீரை ஆளவந்தார், வீரை  கவிராச பண்டிதரின் மகன்.

கச்சியப்ப முனிவரின் மாணவரான கந்தப்பையர் என்கிற அந்தணர் தணிகை ஆற்றுப் படை,  உலா, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத் தமிழ் – ஆகியவற்றை இயற்றியவர். திருச்செங்கோடு பற்றி நாகதிரி புராணம் பாடிய கவிராஜ பண்டிதரும், காசித்தல புராணம் இயற்றிய அவரது தந்தையார் சங்கர நாராயன ஐயரும் அந்தணர்கள்.

தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி – ஆகிய நூல்களுக்கு உரை இயற்றியுள்ள நச்சினார்க்கினியர் ஒர் அந்தணர்.

தமிழைத் தந்த தொல்காப்பியன் என்ற அந்தணன்

இருமொழிப் புலமை படைத்த பரிமேலழகர் ஒரு அந்தணர்.  ‘திருக்குறளுக்கு பழங்காலத்தில் பத்து  அறிஞர்கள் எழுதியுள்ள உரைகளில், மிகவும் சிறப்பாக அமைத்திருப்பது பரிமேலழகர் உரையே என்று அறிஞர்கள் கூறுவார்கள். திவ்ய கவி என்று புகழப்பட்ட பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஓர் அந்தணர்; ‘ப்ரயோக விவேகம்’ என்கிற இலக்கண நூலைச் செய்த சுப்ரமண்ய தீட்சிதர் ஒரு அந்தணர். திருச்செந்தூர் புராணம் இயற்றிய வென்றிமாலைக் கவிராயர் ஒரு அந்தணர். ஆங்கில மொழியின் செல்வாக்கு இந்திய முழுவது பரவிய 19-ஆவது நூற்றாண்டில் தமிழை வளர்க்க பல அந்தணர்கள் பாடுபட்டார்கள்.

பரிதிமாற் கலைஞர் – என்று தனது பெயரை மாற்றி கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்களில் ஒருவர். தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையை இவருடைய ‘நாடகவியல்’ என்கிற நூல் போக்கியதாகக் கூறப்படுவதுண்டு.  இந்திய மொழிகளை பாடதிட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு சென்னைப் பல்கலைக் கழகம் முனைந்த போது , சூர்ய நாராயண சாஸ்திரியார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பெரும் முயற்சிகளைச் செய்து, அதைத் தடுத்து நிறுத்தினார். மறைமலை அடிகள் இவருடைய மாணவர்களில் ஒருவர்.

பரிமேலழகர் உரைக்கு விளக்கமும், மேலும் பல நூல்களும் எழுதிய சடகோப ராமாஜாச்சாரியார் ஓர் அந்தணர். சிறுவர்களுக்காக வசன நடையில் இலக்கணம் எழுதித் தந்த  அந்தணர் மகாலிங்க ஐயர் . அவருடைய அந்த நூல் ‘மகாலிங்கய்யர் இலக்கணம்’ என்றே பெயர் பெற்றது. இயல்மொழி வாழ்த்து, இறையனார் ஆற்றுப்படை,  நற்றினை உரை உள்ளிட்ட  பல நல்ல நூல்களைப் எழுதியவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்.  பல அரிய இலக்கண நூல்களைப் படைத்தவர் விசாகப் பெருமாள் ஐயர் என்கிற அந்தணர்.

நன்னூல், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, நன்னெறி, மூதுரை திருவள்ளுவமாலை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர் சரவணப் பெருமாள் ஐயர் என்கிற அந்தணர்.  திருவள்ளுவ மாலைக்கு இவர் செய்த உரைதான் இப்போது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  குறவஞ்சி, நகுமலை குறவஞ்சி என்ற நூல்களை இயற்றிய யாழ்ப்பாணம் விஸ்வநாத சாஸ்திரி ஒர் அந்தணர்.

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் விளம்பரம் தேடாமல், தமிழின் பெயரால் பிழைப்பு நடத்த முயலாமல் – பெரும் தமிழ்த்தொண்டாற்றி பிராமணர்கள் பட்டியல் இன்னமும் இருக்கிறது.

வெறுக்கத்தக்கதாபிராமணீயம்? – சோ- 13- யார்தமிழர்கள்?

பிராமணன் வீட்டில் பேசுவது தமிழ்; தமிழை சுத்தமாக உச்சரிப்பதில் வேறு எந்தப் பிரிவினருக்கும் பின் தங்கியவர்கள் அல்லர்  பிராமணர்கள் ;  தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டு புரிந்தவர்கள் பிராமணர்கள்; அமெரிக்காவில் வளர்கிற தன் விட்டுக் குழந்தைகள்கூட தமிழ் கற்காமல் இருந்து விடக் கூடாது என்று முனைபவர்கள் பிராமணர்கள்;  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பிராமணர்கள் ; ஆனாலும், ‘தமிழர்கள் வேறு, பிராமணர்கள் வேறு’ என்ற பிரசாரம் இடைவிடாது நடத்தப்படுகிறது.

வீட்டிலே தெலுங்கு பேசுகிற லட்சக்கணக்கானவர்கள், தெலுங்கைத் தங்கள் தாய்மொழியாகப் பிரகடனம் செய்பவர்கள், கழகங்களிலே இருப்பதால் – அவர்கள் தமிழர்கள்.  உருது தாய் மொழியாக ஏற்கிற ஒரு பகுதி முஸ்லிம்கள் கூட தமிழகத்திலே வாழ்வதால் அவர்கள் தமிழர்கள் ;  ஆனால் பிராமணன் தமிழன் அல்ல ! இந்த வக்கிரமான வாதத்திற்குக் கூறப்படுகிற காரணம் என்ன ? பிராமணன் ஸம்ஸ்க்ருதத்தை ஏற்கிறான் என்பதுதான். லத்தீன் மொழியில் ஓதப்படுகிற சொற்களை கிறிஸ்துவர்கள் ஏற்றாலும் – அவர்கள் தமிழர்களே;  அரபு மொழியில் ஓதப்படுகிற விஷயங்களை முஸ்லிம்கள் ஏற்றாலும், அவர்கள் தமிழர்களே;  ஆனால் ஸம்ஸ்க்ருத மொழியில் ஒதப்படுகிற மந்திரங்களை ஏற்பதால், பிராமணன் தமிழன் அல்ல !  பிதற்றல் அல்லவா இது !

மற்ற எந்த ஜாதியினரை விடவும் மிக அதிகமாக, பிராமணர்களே ஸம்ஸ்க்ருத மொழியை மதிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. வேதங்களும், அதன் பின்னர் வந்த புராணங்களும், அவற்றை ஒட்டிய ஸ்லோகங்களும், மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில் தான் இருக்கின்றன. மந்திரங்களின் வார்த்தைக்கு மட்டுமல்லாமல், சப்தத்திற்கும் வலிமை உண்டு – என்பது நம்பிக்கை. ஆகையால் ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்திருக்கிற வேதங்கள் மந்திரங்கள் போன்றவை அப்படியே உச்சரிக்கப்படுகின்றன. சொல்லப் போனால், வார்த்தை, சப்தம் தவிர, ஏற்ற இறக்கங்களும் கூட ஒழுங்காக இருந்தால்தான், மந்திரத்தில் வலிமை சிதையமால் இருக்கும் – என்பது தான் பெரியவர்கள் கூறுவது. இதெல்லாம் இப்போது நலிந்து வருகின்றன என்பது வேறு விஷயம். ஆனால் விட்ட குறை தொட்ட குறையாக, இந்த நம்பிக்கைகள் ஓரளவுக்காவது தொடர்கின்றன.

ஸம்ஸ்க்ருத மொழி, இந்நாட்டு மொழி , தமிழ் மன்னர்களும் போற்றி வளர்த்த மொழி. அருமையான காவியங்களை வழங்கிய மொழி. இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு அது அவசிய இல்லாமற் போய்விட்டாலும், கம்ப்யூட்டருக்குக்கூட அந்த மொழி மிகவும் ஏற்றது என்ற கருத்து ஜெர்மனி போன்ற நாட்டில் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மிக அருமையான, தெளிவான அறிவுபூர்வமான விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்கிற பல படைப்புகளைத் தந்துள்ள அந்த மொழியை நாம் ஒழித்துக் கட்டினால் – நஷ்டம் மொழிக்கு அல்ல, நமக்குத்தான். வேதங்கள் உபநிஷத்துக்கள், போன்ற தத்துவ பொக்கிஷங்கள் தவிர, காளிதாஸனின் காவியங்கள், பாஸ்கரனின் சாத்திரம், ஆர்யபட்டாவின் ஆராய்ச்சிகள், பர்த்ருஹரியின் அறிவுரைகள், பீஷ்மரின் வழியாக வந்த வியாஸரின் நீதி சாத்திரம், கெளடில்யரின் நிர்வாக நூல், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், பதஞ்சலியின் யோகா நூல் , சுஸ்ருதனின் மருத்துவம், குழந்தைகளும் புரிந்து கொள்ளக் கூடிய பஞ்ச தந்திரக் கதைகள்….  போன்ற நன்னெறி போதனைகள்; காளி தாஸனின் உவமைத் திறனையும், பாரவியின் பொருட் செறிவையும், தண்டியின் சொல் ஆளுகையும்  சேர்த்து அளிப்பதாகக் கருதப்படுகிற மாகனின் காப்பியம்; பூஜ்யத்தை கணித சாத்திரத்திற்கு அளித்து, அதன் முன்னேற்றத்திற்குப் பேருதவி புரிந்த இந்திய ஆராய்ச்சியாளர்களின் கணித நூல்கள், ஆயுர்வேத மருத்துவ முறையை விளக்குகிற நூல்கள் என்று கொட்டிக் கிடக்கிற அறிவுத் திறனுக்கும் – எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று நாம் சொன்னால், ஸம்ஸ்கிருதத்திற்கா நஷ்டம் ?  கலைச் செல்வங்கள் எந்த மூலையில், எந்த மொழியில் இருந்தாலும் அதைக் கொண்டு வந்து இங்கே கொட்டுங்கள் – என்றார் பாரதியார்; நம்மிடம் கொட்டிக் கிடக்கிற கலைச் செல்வத்தைத் தூக்கிக் குப்பையில் எறியுங்கள் என்கிறார்கள் இன்றைய பகுத்தறிவாளர்கள் !

துவேஷத்தைத் தவிர, அர்த்தமற்ற ஒரு வெறுப்புணர்வைத் தவிர, இந்த மூர்க்கத்தனத்திற்கு வேறு என்ன காரணம் இருக்கிறது? முன்பு பிராமணர்கள் அல்லாதவர்களும் கூட, இம் மொழியில் பாண்டித்யம் பெற்று கல்லூரி பேராசிரியர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள். ஸம்ஸ்க்கிருதம் கற்க கூடாது  என்ற தடை எந்தக்காலத்திலும், எந்தப்பிரிவினருக்கும் , எந்தச் சாத்திரத்திலும் விதிக்கப்படவில்லை.  இப்படிப்பட்ட ஸம்ஸ்க்கிருத மொழியைப் இன்று பெரும்பாலான பிராமணர்கள் கூட இன்று கற்பதில்லை.

ஸ்ம்ஸ்க்கிருதத்தைக் கற்றால், அது நடைமுறை வாழ்க்கைக்கு உதவப் போகிறது என்பதல்ல நம் வாதம். கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பவர்கள் – அம்மொழியைக் கற்பதால் – அவர்கள் தமிழ் விரோதிகள்  ஆகிவிட மாட்டார்கள் என்று கூறுகிறேன் -அவ்வளவுதான். இவை ஒருபுறமிருக்க, ஸம்ஸ்க்கிருதத்தை ஏற்பதால் – பிராமணன் தமிழன் அல்ல என்று ஆகிவிடுவானா ? அப்படியானால் ஆங்கிலத்தை மதிப்பதாலும், கற்பதாலும் – ஒருவன் தமிழன் அல்ல என்று ஆகிவிடுமே? அப்படிப் பார்த்தால் இன்று தமிழ்நாட்டில் தமிழர்களே இருக்க மாட்டார்களே?

பிராமணன் வீட்டில் பேசுகிற தமிழ் ஏளனத்திற்குரியது; மற்ற ஜாதியினர் பேசுகிற தமிழ் எப்படிப் பட்டதாக இருந்தாலும் அது கேலிக்குரியதல்ல. இப்படி ஒரு நியாயம் இன்று நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. அகத்துக்காரர் என்பது மருவி ஆத்துக்காரர் என்றும், அகத்துக்காரி என்பது மருவி ஆத்துக்காரி என்றும் பிராமணர்கள் வீடுகளில் பேசப்படுவது – கேவலம்.  ஆனால் ஊட்டுக்கார், ஊட்டுக்காரி, அப்புச்சி, ஆச்சி போன்றவை கேலிக்குரியவை அல்ல. ‘அவர்கள்’ என்பது மருவி ‘அவா’ என்று பிராமணனால் பேசப்படுவது மட்டம்; ஆனால் அதுவே ‘அவுக’ என்றும் ‘அவனுங்க’ என்றும் கூறப்படுவது தவறல்ல. இது நியாயவாதமா? அல்லது நியாயம் சிறிதுமற்ற த்வேஷ வாதமா? பேசிகினுகிறான் என்று சொன்னால் தவறில்லை;  பேசி கிட்டிருக்கான் என்று சொன்னால் குற்றமில்லை; ஆனால்  ‘பேசிண்டிருக்கான்’ என்று சொன்னால் அது ஏளனத்திற்குரியது ; ஏனென்றால் அது பிராமணன் பேச்சு.

எந்த மொழியானாலும் சரி – வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு பிரிவுகளில் அது சில மாறுதல்களோடு பேச்சு வழக்கில் இருக்கும். அது பேச்சு மொழியின் அழகு. பெர்னாட்ஷாவின் நாடகமொன்றில், ஒரு மொழி விற்பன்னர், ஒருவருடை ஆங்கிலப் பேச்சை வைத்து அவர் எந்த பகுதியில், எந்தப் பிரிவில், எந்தத் தொழிலைச் சார்ந்தவர் என்று கூறிவிடுவதாக ஒரு காட்சி வரும். இது ஆங்கிலத்திற்கு அவமானமல்ல. ஒரு மொழியின் கொச்சை உருவத்தின் வளம் இது தமிழ்நாட்டிலோ, பல மொழிகள் கலந்த மெட்ராஸ் பாஷை கூட ஏற்புடையது; ஆனால் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற சில வார்த்தைகள் மிகவும் ஏளனத்திற்குரியவை – என்ற வகையில் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் சித்தரிக்கப் படுகிறது. துவேஷப் பிரசாரத்தின் விளைவுகளில் இது ஒன்று.

‘தமில் மொலியில் உல் இலக்கியங்கள்’ என்று பேசி தமிழை வளர்க்கிற அறிஞர்கள்;  ‘தாய் தடுத்தாலும் தமிளைபளிப்பவனைலிடே என்பதை ஸொல்வி கொல்கிறேன்’ என்று சவால் விட்டு தமிழைக் காப்பாற்றுகிற  தலைவர்கள் ; ‘தமிளை வாள வைத்து, உளகிளேயே கள் தோன்றி மண் தோன்றா காளத்தில் பிறந்தது என்பதை பரை  சாற்றி.. ‘ எனப் பேசி தமிழின் பெருமையை நிலை நாட்டுகிற தமிழ்ப் பற்றாளர்கள். ஆகிய தமிழ்க் கொலை நிபுணர்கள் எல்லோரும் – தமிழர்கள். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழை ஒழுங்காக உச்சரித்து, வீட்டிலே தமிழில்பேசி, ஸம்ஸ்கிருத ஸ்லோகத்தைக் கூறினாலும், அது முடிந்து இறைவனிடம் தனது வேண்டுகோளையும் தமிழிலே வைக்கிற பிராமணன், தமிழன் அல்ல!

அவ்வளவு ஏன்? தன்னைக் கன்னடியன் என்று வெளிப்படையாகக் கூறி, தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்று தூற்றிய பெரியார் – தமிழ்த் தலைவர் ஆனால் தமிழைக் கற்று, வீட்டிலே தமிழ் பேசி, அதைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பிராமணன் தமிழன் அல்ல !  இது வாதம் அல்ல – பிடிவாதம் கூட அல்ல – வெறும் மோசடி.

முற்றும்

பின்னூட்டமொன்றை இடுக