பார்பான் யார் ? – 3

(Ref : web pages)

( ब्रह्मन् = பிராமணர் = அந்தணர் = பார்பார் = மறையோர் = வேதியர் =  ஐயர் = அறவோர் = முனிவர் = ब्रह्मन् )

(image – tamilvedas.com)

சனாதன தத்துவங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் இஸ்லாம், கிறிஸ்தவம் போல் உருவாக்கப்பட்ட மதம் அல்ல. சனாதன தர்மம் (Sanatan Dharma) அல்லது “நிலையான தத்துவஞானம் / இசைவு / நம்பிக்கை  என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த சமயத்தைக் குறித்து வந்த பெயராகும். இது மனிதனால் உருவாக்கப் பட்டவற்றைக் கடந்து,  தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய  உணர்வுப்பூர்வமான  அறிவியலைக்  குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது. பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் கடவுள்கள் இணைத்த ஒரு கூட்டு உருவாக்கம் ஆகும்.  உலகில் மதங்களே தோன்றாத போது இதற்கான ஒரு தனிப்பட்ட பெயர் தேவை இல்லாமல் இருந்தது. இத்தத்துவங்கள் சரஸ்வதி நதி தீர்த்தத்திலும் பின்பு சிந்து சமவெளியில் பரவியதால் சிந்து என்பது ஹிந்து என்று திரிசொல்லாக மாறி அதையே நமது தத்துவத்தின் மத பெயராக ஏற்கப்பட்டது.

இலக்கிய அறிவும் ஆய்வுப் பட்டறிவும் நிரம்பப் பெற்ற பேராசிரியர்கள் பலரின் கருத்து, சங்ககாலம் தொடங்கி இன்றுவரை பொருள் மாறாமல் நின்று நிலவிடும் சொற்கள் பரதவர் என்பதும் பார்ப்பனர் என்பதும் மட்டுமே என்கின்றனர். கடலோரத்தில் வாழ்ந்துகொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவோர் பரதவர் என்றே இன்றுவரை குறிக்கப் பெறுவதைப் போலவே பார்ப்பனர் என்பதும் இராயிரம் ஆண்டாக நிலைபெற்றுள்ளது என்பதே பெருமைக்குரியதாக  கருதப்பட வேண்டும்! பார்ப்பனரின் வாதூல கோத்திரம் வாதுளி என்றும் பாரத்வாஜ கோத்ரம் நெடும்பாரதாயன் எனும் பெயராலும் கவுண்டில்ய கோத்திரம் கவுணியன் எனும் பெயராலும் கௌதம கோத்திரம் கோதமன் என்ற பெயராலும் இலக்கியங்களில் காணப்படுகிறதே! பசுமாடுகளைக் கயிற்றால் பிணைத்து ஓரணியில் கட்டப்பட்ட நிலைக்குக் கோத்திரம் என்று வடமொழியில் கூறுவர்.  அதைத் தமிழ் இலக்கியம் பொத்தி வைத்துத் தருகிறது.

பிராமணர்களுக்கும் புதிதாகத் தமிழகத்தில் தோன்றிய அரசுக்குமான நெருங்கிய பிணைப்பை உறுதி செய்யும் ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. பிராமணர்களும் அவர்களின் புதிய பண்பாடும், அரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர், சோழர் காலங்களில் தமிழ்ச் சமுதாயம் நிலவுடைமை சமுதாயமாக வளர்ச்சியடைந்து அடைந்து அவர்கள்  சமூக ஆதிக்கம் பெற்றதை அறிய முடிகிறது

சங்க காலத்தில் தொடங்கிய சனாதன ஹிந்து தத்துவ வளர்ச்சியுடன் சமஸ்கிருத மொழியும் தமிழ்ச்சமூகத்தில் முழுமனதுடன் ஏற்கப்பட்டுத் தழைத்து வளர்ந்தது.. பல்லவ, சோழர் ஆட்சிக்காலத்தில் ஆகமவிதிப்படி சமஸ்கிருத மொழி மந்திரங்கள் கோவில்களிலும் பண்பாட்டு வளர்ச்சியாக இடம் பெற்றது.. சாதாரண பொதுமக்கள் வழிபட்டு வந்த கிராமப்புறத் தெய்வ வழிபாட்டில் சமஸ்க்கிருதம் இல்லை.

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் சமூக நிறுவனமாகச் செயல்பட்டன. கோயில்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தினர். அரசனைத் தலைமையாகக் கொண்ட பெரும் நிலவுடைமையானோர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து நன்கு தெரிய வருகிறது. சமூகத்தின் இந்த ஆளும் வர்கத்தவர்கள் சனாதன தத்துவங்களை மனப்பூர்வமாகவே விரும்பி வலியசென்று ஏற்றுக்கொண்டதற்கு அரசாண்ட மன்னர்களே சாட்சியாக இருந்தனர். தமிழ்ச் சமூகம் பிராமணர்களையும், சமஸ்கிருத மொழியையும் ஊட்டி வளர்த்து.

வேதத்தைப்பார்ப்பதால், பார்ப்பான் என வந்தது என்பது பேராசிரியர்களின் கூற்று.  இப்படி சங்க பாடல்களில் கபிலர் போன்று அற ஒழுக்கத்துடன் வாழ்ந்த பார்ப்பன புலவர்களையும் – வேதம் ஓதா வேளாப்பார்ப்பான் என்பவர்களையும் – அரசனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பார்ப்பனர்கள் பற்றியும் – காதலுக்கு துதூ போன பார்ப்பனர்கள் பற்றியும் – காதல் வயப்பட்ட தலைவன் தலைவியிடையே தூதுபோன பார்ப்பனர்களை தூதொய்பார்ப்பான்என்று அகநானூறு (பாடல் 337)  சங்கு அறுத்து வாழ்ந்த பார்ப்பன புலவர்களை பற்றியும் (நக்கீரர் இந்த வகை பார்ப்பனர்) – – வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும் அகநானூற்றுவரிகள் (பாடல் – 94)  – யானைப் பாகர்களாக வேலை செய்த பார்ப்பனர்கள் பற்றியும் – தீய எண்ணத்துடன் பெண்களைத் தீண்டும் சில பார்ப்பனர்கள் பற்றியும் – அண்ணாவிப் பார்ப்பனர்கள்  என்ற பெயரில் வேதமே படிக்கக் கூடாத பார்ப்பனர்கள் பற்றியும் –  கந்துவட்டித் தொழில் செய்த  பார்ப்பனர்கள் பற்றியும் – சண்டையிடும் அரசர்க்கிடையே தூதுசென்ற  பார்ப்பனர்களையும் பற்றியும்  பாடல்கள் நிறையவே உள்ளன. வேள்விப் பாகம் உண்ட பைங்கப்பார்ப்பான் என்று அவிர்ப்பாகம் உண்ட ஐயரைக்  குறிப்பது  (பரிபாடல்) திருந்துகேளாய் முழுதிர்தமுது பார்ப்பான் அஞ்சின முதுபார்ப்பான்  என்று கலித்தொகை வருணிக்கிறது.

அந்தணர்க்குரியஇயல்புகள்

அந்தணர், ஐயர், பார்ப்பார் ஆகிய சொற்கள் குறிப்பிட்ட ஒரு குழுவினுக்குள் அடங்கும் பகுப்புகள் ஆகும். இக்குழுவினர் வேதத்துடன் தொடர்புடைய குழுவினராகக்  கருதத்தக்கவர்கள் ஆவர். கரணம் யாத்தவர்கள் ஐயர் ஆகின்றனர். செந்தன்மை பூண்டொழுகுபவர்கள் அந்தணர்கள் ஆகின்றனர். பார்ப்பார் என்பவர் மறைநூல்களைப் பார்ப்பவர் அல்லது பார்த்து ஓதுபவர் ஆகின்றனர். இவர்களில் அந்தணர் என்போருக்கான இலக்கணம் பின்வருமாறு.

 ” நூலே கரகம் முக்கோல் மணையே
 ஆயுங்காலை அந்தணர்க்கு உரிய”    (தொல்காப்பியம், மரபியல் – 71)

நூல், தண்ணீர் இருக்கும் கெண்டி என்ற செம்பு, முக்கோல், அமரும் மணை  ஆகியனவற்றைக் கொண்டிருப்பவர்கள் அந்தணர்கள் என்று உரைக்கின்றது தொல்காப்பியம். அனைத்து அந்தணர்களுக்கும் முப்புரி நூல் என்பது அடையாளமாகும். கரகமும், முக்கோலும் தவம் செய்யும் அந்தணர்க்கு உரியப் பொருள்கள் ஆகும். இவ்வடையாளங்களுடன் சங்க இலக்கியத்தில் அந்தணர்கள் சித்திரிக்கப்பெற்றுள்ளனர்.

கலித்தொகையில்அந்தணர் ஒருவரை விளித்து தன் மகள் உடன்போக்குப் போனதைப்  பற்றி அறிய விரும்புகிறாள் செவிலித்தாய்.

“எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
 உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்
 நெறிபடச் சுவல்அசைஇ வேறுஒரா நெஞ்சத்துக்
 குறிப்புஏவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்”   (கலித்தொகை – 9)

என்ற பாடலில் இடம்பெறும் அந்தணர் அப்படியே தொல்காப்பியர் காட்டிய காட்சிப்படி வருணனை செய்யப்பெற்றுள்ளார். தொல்காப்பியர் காட்டிய கரகம், முக்கோல் அவரிடத்தில் காணப்படுகின்றன. கூடுதலாக ஒரு குடையை அவர் வைத்திருந்துள்ளார். இவ்வாறு கலித்தொகை காலத்தில் அந்தணர்கள் விளங்கிய தோற்றம் தெரியவருகின்றது.

“ஆறுஅறி அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன்” சிவபெருமான்   (கலித்தொகை -1)என்ற குறிப்பு கலித்தொகையின் வழி கிடைக்கின்றது. இத்தொடரின் வழியாக வேதங்களின் ஆறு அங்கங்களை ஓதி உணர்ந்தவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகிறது. அந்தணர் தீ வளர்த்தலை கலித்தொகையும் குறிப்பிடுகின்றது.

“கேள்வி அந்தணர்கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும்” என்ற (கலித்தொகை -36) அடியின் வழியாக அந்தணர் வேள்வித்தீ வளர்ப்பர் என்தும், வேள்வித்தீ வளரக்கும் போது எழும் புகைபோல என் உயிர் அலைவுறும் என்று தலைவி பேசுவதும் இவ்வடிகளின் பொருளாகும்

“அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச் செவ்வழல் தொடங்க”  (கலித்தொகை – 119) என்ற அந்திக் காலத்தில் அந்தணர் வேள்வி செய்வர் என்ற குறிப்பும்  பாடலடியின் வழி தெரிய வருகின்றது.

கலித்தொகையில்பார்ப்பானை முன்வைத்து ஒரு அழகான அகக்காட்சி புனையப்பெற்றுள்ளது.

“அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ், நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக   5
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,
பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி,   10
யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன்
பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி,   15
‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ’ ‘மற்று யான்
ஏனைப் பிசாசருள்; என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்’
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, 20
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,
 (கலித்தொகை – 65)

என்ற இந்தப் பாடல் தலைவி தலைவனைச் சந்திக்க விடாமல் ஆடிய கூத்தாகச் சுட்டப்பெறுகின்றது

மொட்டைத்தலையும் முக்காடும் கொண்டு இந்த ஊரில் சுற்றித்திரியும் கிழட்டுக் கூனல் விழுந்த பார்ப்பான் ஒருவன்  அன்றைக்கு என்னை வழி மறித்தான். நான் தலைவனைக்காணப் போர்வை ஒன்றைப் போர்த்தியபடி இரவு நேரத்தில் நின்றிருக்க அவன் என்னைக் குனிந்து பார்த்து நேரங் கெட்ட நேரத்தில் இங்கு நிற்கும் நீங்கள் யார்? என வினவினான். அதன் பின் வெற்றிலை தின்கிறாயா என்று என்னைக் கேட்டான்;. நான் பதில் பேசாது நிற்கவே என்னிடம் அவன் மேலும் பேச்சினை வளர்த்தான். நீ பெண் பிசாசு. யான் ஆண் பிசாசு. என் காதலுக்கு நீ இரங்கு என்று ஏதோ ஏதோ அவன் பேசினான். அந்நேரத்தில் அவன்மீது மணலை அள்ளி வீசிவிட்டு நான் அவனிடமிருந்துத் தப்பி வந்தேன். அவன் இந்நிகழ்ச்சியை ஊர் முழுவதும் சொல்லிக்கொண்டு அலைகிறான். நான் தலைவனைக் காணமுடியாமல் ஆயிற்று. என்னைப் பற்றி ஊரார் பேசும்படியும் ஆயிற்று என்று பார்ப்பானை முன்வைத்து இக்கலித்தொகைப் பாடல் பின்னப்பெற்றுள்ளது.

கபிலர் பாரிமகளிரை திருமணம் செய்து கொள்ள விச்சிக்கோன் என்ற அரசனிடம் வேண்டியபோது தான் அந்தணன் என்று தன்னை அடையாளப்படுத்துகின்றார்.

“யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
 வரிசையி;ல் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி”     (புறநானூறு – 200)
என்றும் “யானே  தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே”  (புறநானூறு- 201)
என்றும் பாடுகின்றார். இவ்வகையில் அந்தண மரபினர் புலவோராகவும் சங்ககாலத்தில் இருந்துள்ளனர் என்பது குறிக்கத்தக்கது.

“அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கின் ”   (புறநானூறு – 2)

என்று அந்தணர்கள் அந்தி நேரத்தில் அருங்கடன் செய்யும் நடைமுறை புறநானூற்றில் காட்டப்பெறுகின்றது.

“நன்பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு அருங்கலம் நீரோடு சிதறி ”  (புறநானூறு -361)

என்று மற்றொரு குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகின்றது. கேள்வியறிவு மிக்க அந்தணர்கள் வேள்வி செய்வதில் வல்லவர்கள்,  அவர்களுக்கு அணிகலன்கள் பலவற்றை அளித்தல் கொடை  என்பது இப்பாடலடி தரும் விளக்கமாகும்.  வேள்வி செய்தலை மற்றொரு புறநானூற்றுப் பாடலும் குறிக்கின்றது.

“அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன்” (புறநானூறு – 397)

என்ற பாடலடியின் வழியாக அறம் புரிந்து தீ வளர்ப்பவர்கள் அந்தணர்கள் என்பது தெரியவருகின்றது.

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வன்”- ( புறம் – 93 )

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக” – ( புறம் – 26 )

முத்தீவிளக்கிற்றுஞ்சும் –  ( புறம் – 2)

`நெய்மலி ஆவுதி பொங்கப் பன் மாண் வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பவகொல்” – ( புறம் – 15 )

`வேத வேள்வி துறை முடித்தூ உம்” – ( புறம் – 224 )

பிராமணர்கள் வேள்வி நடத்தி வைத்த செயல் சங்க இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது

பார்ப்பார் நோவன செய்யலர்” – ( புறம் – 43 ) நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்கார் என்று நைச்சியமாகப் பார்ப்பான் பேசியதை காட்டுகிறது

என்று குறிப்பிடப்படுகிறான். பார்ப்பனருக்கு எந்த தீங்கும் அரசர்கள் செய்யமாட்டார்கள் என்ற செய்தி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பாண்டிய அரசனுடைய அவையில் பிராமணர் இருந்தனர் என்பதை

``நான்மறை முதல்வர் சுற்றமாக”- ( புறம் – 26 ) என்ற குறிப்பிலிருந்து அறியலாம்.

பிராமணர்கள் அரசனுக்கு அருகில் இருந்து ஆலோசனை கூறி அவனை வழி நடத்தும் இடத்தில் செல்வாக்குடன் இருந்தனர் என்பது சங்க இலக்கியத்தால் அறியப்படுகிறது. இதனை உறுதி செய்து பேராசிரியர் ( George L.Hart ) தனது ( The Poems of Ancient Tamil ) என்ற நூலில் (“Brahmins seem to have identified themselves closely with the Kings”) என்று கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

புறநானூற்றில் பார்ப்பன வாகை என்ற துறையில் இருபாடல்கள் அமைகின்றன. அதில் (166) ஆம் எண்ணுடைய பாடல் ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடல் ஆகும். இப்பாடல் சோழநாட்டுப் பூஞ்சாற்றூர்ப்  பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப்  பாடியதாகும்.

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய;
மறம்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
சிறுநுதல்பேர் அகல்அல்குல்
சில சொல்லின் பலகூந்தல் நின்
நிலைக்குஒத்தநின் துணைத்துணைவியர்
தமக்குஅமைந்த தொழில்கேட்பக்;
காடுஎன்றா நாடுஎன்றுஆங்கு
ஈரேழின் இடம்முட்டாது
நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
விருந்துற்றநின் திருந்துஏந்துநிலை
என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே; செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே.  (புறநானூறு – 166)

என்ற இப்பாடலில் பார்ப்பன வெற்றி பாடப்பெற்றுள்ளது உரை: மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்குறிரிய சிறப்புடைய  முனிவர்களின்  அறிஞர்களின் வழித்தோன்றலே !

வேள்விக்காக, நீ காட்டு மானின் தோலை உன் பூணூலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும், அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை, நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும் மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.

(புறம் – 305) ஆம் பாடலும் பார்ப்பான் தூது சென்றதால் நாடுகளுக்குள் அமைதி நிலவியது என்ற குறிப்பினைத்தருகின்றது

“நாவல் அந்தணர் அருமறைப்பொருள்” என திருமால் குறிக்கப்படுகிறார் (பரிபாடல் – 1)   பரிபாடலில் பல இடங்களில் அந்தணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும்  தாதையும் நீ என மொழியுமால்; அந்தணர் அருமறை” (பரிபாடல் – 3) அந்தணர் பயிற்றும் அருமறையின் ஒரு வரியை அப்படியே எடுத்தாளுகிறது பரிபாடல். இந்த பாடலடியின் வழியாகத்  தாமரைப் பூவில் பிறந்த பிரம்மனும் அவனின் தந்தையும் ஆகிய திருமால் நீயே என்று வேதநெறி சொல்வதாக  குறிப்பிடுகின்றது. இவ்வகையில் மறைகள் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன.

“விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப”    (பரிபாடல் -11) தை நீராடல் நடைபெற்றது என்று குறிக்கின்றது பரிபாடல்.  விழாக்கள் சங்க காலத்தில் அந்தணர் கொண்டு தொடங்கப் பெற்றுள்ளது என்பது இதன் வழி தெரிகின்றது.

சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் அரண்மனை பொருநர், புலவர், அந்தணர் ஆகியோருக்கு அடையா வாயிலாக விளங்கும் என்ற குறிப்பு கிடைக்கின்றது.  (சிறுபாணாற்றுப்படை – 204)  இதன் வழி அந்தணர்க்கு ஈவது அரசர் கடனாக இருந்துள்ளது என்பது வெளிப்படை

“கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த வேள்வி”  (பெரும்பாணாற்றுப்படை – 315) என்ற அடிகள் அந்தணர் வேள்வி செய்தமையைக் குறிக்கின்றது.

பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்று மறை காப்பாளர் உறை பதி” – ( பெரும்பாணாற்றுப்படை – 298-301 )

அந்தக் காலத்திலேயே  அக்ரகாரங்கள் தமிழகத்தில் தோன்றி விட்டன என்பதை இது தெரிவிக்கிறது. பிராமணர்களுக்கும், அரசர்களுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பிராமணர்கள் தனியாக வாழ்ந்தனர். அங்கு நாய், கோழி போன்றவை இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. கிளிகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்படுகிறது

“அந்தி அந்தணர் அயர” என்று ( குறிஞ்சிப்பாட்டிலும் – 225) ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. அறம் புரி அந்தணர்” – (பதிற்றுப்பத்து  – 24) என்று குறிப்பிடப்படுகின்றனர். இதுவும் பிராமணர்களின் தனித்தன்மைச் செய்கைகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.   “ஓதல் அந்தணர் வேதம் பாட” என்ற (மதுரைக்காஞ்சி – 656) குறிப்பு  இடம்பெறுகின்றது. .  அந்தணர்ப்  பள்ளியின்  சிறப்பை  மதுரைக்காஞ்சி  பின்வருமாறு  பாடுகின்றது.

“சிறந்த வேதம் விளங்கப்பாடி
   விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
   நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
   உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
   அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
   பெரியோ மேஎய் இனிதின்  உறையும்
   குன்றுகுளின்றன்ன அந்தணர் பள்ளியும்” (மதுரைக்கா ஞ்சி – 468-474)

`தாதுண் தும்பி போது முரன்றாங்கு ஓதல் அந்தணர் வேதம் பாட” – மதுரை காஞ்சி  ( 655, 656 ) அந்தணர் வேதம் ஓதுதலை வண்டுகளின் ரீங்காரத்துடன் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் அந்தணர் பள்ளியின் சிறப்பு காட்டப்படுகின்றது சிறந்த வேதங்கள் விளங்கப் பாடும் அந்தணர்கள் இருக்குமிடம் அந்தணப்பள்ளி ஆகும். இங்குள்ள அந்தணர்கள் வேள்விகள் செய்து, பிரமம் என்ற பொருளாகத் தாமே ஆகி உயர்ந்த தேவர் உலகத்தை அடையும் சிறப்பினை உடையவர்கள், அறநெறி தவறாதவர்கள், பல பெரியோர்கள் உடன் தங்கியிருக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் அந்தணர்கள் என்று அக்காலத்தில் அந்தணப் பள்ளி இருந்து நிலையை இவ்விலக்கியம் காட்டுகின்றது.

வேளாப் பார்ப்பான் வாவரந்துமித்த  ( அகநானூறு )

   “தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஓலைப்
   படையுடைக் கையர் வருதிறம் நோக்கி
   உண்ணா மருங்குல் இன்னோன் கையது
   பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே
   தடிந்துஉடன் வீழ்ந்த கடுங்கண் மழவர்
   திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
   செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
   காடுவிடு குருதி தூங்குகுடர் கறீஇ”( அகநாநூறு – 397)

என்ற பாடலில் இக்குறிப்பு இடம்பெறுகின்றது. தூதாக வந்த ஒரு பார்ப்பானை அவன் மடியில் பொன் வைத்திருக்கலாம் என்று எண்ணி எயினர் கொன்றுவிடுகின்றனர் கொன்றபின்பு அப்பார்ப்பான் மடியைப் பார்த்த அவர்கள் அவனிடம் ஏதும் இல்லாமை கண்டும் அவனின் வறுமை சார்ந்த ஆடையைக் கண்டும் அவனைக் கொன்றது தேவையற்றது என உணர்ந்து அப்படியே அவனை விட்டுவிட்டுச்சென்றுவிட்டனர். அவனது உடலில் இருந்து குடல் தொங்கிய வண்ணம் இருக்க அதனை ஒரு  நரி உண்ணக் கொடுமையான வழியில் தலைவன் பயணிக்கவேண்டும் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது, பார்ப்பார் தூது செல்கின்றபோது ஏற்படும் இன்னலை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

அருங்காலம் நீரோடு சிதறி” `அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை” –  ( பட்டினப்பாலை 54, 55 )

வேள்வி செய்விக்கும் சிறப்பு பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. வேறு யாரும் வேள்வி செய்வித்தாகக் குறிப்பு இல்லை.

முல்லைப் பாட்டு

கற்றோய்த் துடுத்துப் படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப நிற்போர் எனப் பாடுகிறது  (முல்லைப் பாட்டு.)

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
என்று குறுந்தொகை (பாடல்- 156)

நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
நெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்
என்று ஒலிக்கிறது  (சிலப்பதிகாரம்.)

பார்ப்பினி எனப் பார்ப்பனப் பெண்ணைஅழைப்பதை பாசண்டன்யான் பார்ப்பினி  தன்மேல் என்று சிலப்பதிகாரமே காட்டுகிறது.

மாலதியும் பார்ப்பானொடு, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, பார்ப்பன வாகை குடியேற்புற என்பனவெல்லாம் சிலம்புப் பரல்கள். படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என இடுசிறை கோட்டத்து இட்டார் என்று கூறுவதும் சிலப்பதிகாரம் தான்!

பார்ப்பார் தவறே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தோர் இளையார் பசுப்பெண்டிர் (ஆசாரக்கோவை).

பார்ப்பன குறுமகன் குடுமி வைத்திருந்ததை ஐங்குறுநூற்றின் – (202)  பாடல் காட்டுகின்றது.

திருமந்திரத்தில் அந்தணர் ஒழுக்கம் பற்றி 14 பாடல்கள் உள்ளன

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே ( திருமந்திரம் – 5௦2 )

பிறப்பால் பார்ப்பான் என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு அந்தணர் அற நெறிகளையும் ஒழுக்கங்களையும் கடைபிடிக்காமல் கடவுளுக்கு அர்சனைகள் செய்தால் அந்த நாட்டில் அரசர் அறவழியில் செல்லாமல் நாடு பஞசத்தில் விழும்

இதை தான் வள்ளுவர் பின் வரும் குறள்களின் மூலம் சொல்லியுள்ளார். வள்ளுவர் ஒரு குறளில் அந்தணர் ஒழுக்கம் பற்றியும் – ஒருகுறளில் அரசன் அற ஒழுக்கம் பற்றியும் – உயிரை கொன்று மாமிச உணவை உண்ணாதவன் ஆயிரம் வேள்விகள் செய்யும் அந்தணர்களை விட உயர்வானவன் என்றும் சொல்லியுள்ளார்.

.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.    (குறள் – 543-)

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.  (  குறள் – 134 )

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.     ( குறள் – 259 )

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.        (  குறள்-560 )

இவ்வாறு அந்தணர் மரபுகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பார்ப்பார், ஐயர் என்ற பிரிவினரும் அந்தணர் என்ற மரபினரோடு இணைத்து எண்ணத்தக்கவர்கள் ஆவர். வேதம் அறிந்தமை பிராமணர்களின் தனிச்சிறப்பு. தமிழ்ச் சமூகத்தில் வேறு யாரும் வேதம் அறிந்திருந்ததற்கான குறிப்பும் – வேள்வி செய்தற்கான குறிப்பும் ஏதும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.

One thought on “பார்பான் யார் ? – 3”

  1. அன்றைய பிராமணர்கள் எளியவரகளாகவும் வறியவர்களாகவும் யாருக்கும் தீங்கு எண்ணாதவர்களாகவும் இருந்ததால் மக்கள் மதிக்கும்படி

    Like

பின்னூட்டமொன்றை இடுக