சரஸ்வதி ராஜாமணி

நமக்குச் சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் மட்டும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவு வந்துவிடுகிறது. ஆனால் அதுபோன்ற சமயத்தில்கூட நம் நினைவுக்கு வராத எண்ணற்ற தியாகிகள் உள்ளனர் அதில் ஒருவர்தான் சரஸ்வதி ராஜாமணி. நம்மில் பலருக்கும் இந்த பெயரை முதல் முறை கேட்பது போல இருக்கலாம். உண்மையும் அதுதான், நாட்டை காட்டிக் கொடுத்தவர்களெல்லாம் தியாகி பட்டத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும் நாட்டில் உண்மையாக விடுதலைக்குப் போராடியவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது சகஜம்தானே. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் முக்கிய பொறுப்பில் இருந்து பின்னர் அவர் மர்மமான இறப்பிற்கு நியாயம் கேட்டுப் போராடி இறுதிவரை அவரின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்காமல் மறைந்தவர்தான் சரஸ்வதி ராஜாமணி.

சரஸ்வதி ராஜாமணி ஒரு பிராமண குடும்பத்தில் 1927 ல் ரங்கூனில் பிறந்த தமிழ்வழி இந்தியர் ஆவார். இவரின் தந்தை என்.எஸ்.ராமநாதன் திருச்சியில் இருந்து பர்மா சென்று மிகப்பெரிய செல்வந்தராய் மாறியவர். இவர்களின் குடும்பமே இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய தேசிய இராணுவப்படையை கட்டமைப்பதில் தீவிரமாய் இருந்தார்.

 20 நிமிட பேட்டியை காண கிழே உள்ள லிங்கில் கூகிலில் சென்று காணலாம்.                   https://www.facebook.com/memeschennai/videos/861667360666063/?t=451

மகாத்மா காந்தி ரங்கூன் சென்றபோது சரஸ்வதி ராஜாமணி அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது, ஒரு பத்து வயது சிறுமி துப்பாக்கி சுடும் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த பத்து வயது சிறுமிதான் நமது வீரத்தமிழச்சி சரஸ்வதி ராஜாமணி. சிறுவயது முதலே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த அவரது ஒரே குறிக்கோள் ஒரே ஒரு வெள்ளையானையாவது சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதுதான். அகிம்சையை விரும்பும் காந்தி வன்முறை கூடாதென அந்த சிறுமியிடம் கூறினார். அதற்கு அந்த சிறுமி வீட்டைக் கொள்ளையடிப்பவர்களைக் கொல்வதுதானே நல்லது, அப்படி என்றால் என் நாட்டை கொள்ளையடிக்கும் வெள்ளையனைக் கொல்வதுதான் அவர்களுக்கான சரியான தண்டனை என்று கூறினாள். சிறுமியின் பதிலைக்  கேட்டு வாயடைத்துப்  போனார் மகாத்மா.

ஒருமுறை ரங்கூனில் நேதாஜி இந்தியச் சுதந்திரம் தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கே அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருத்தி தான் அணிந்திருந்த தங்க, வைர நகைகளைப் போராட்ட நிதியாகக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். கூட்டம் முடிந்தவுடன் சிறுமி ஒருத்தி தன் நகைகளைக் கொடுத்துச் சென்றதைக் கேள்விப்பட்டு அந்த நகைகளைத் திரும்பக் கொடுக்க நேதாஜி அவர்களின் வீடு தேடிச்  சென்றார்.

சிறுமியின் வீட்டிற்குச் சென்ற நேதாஜி நடந்தவற்றைக் கூறி நகைகளை அந்த சிறுமியின் பெற்றோரிடம் கொடுக்க முனைந்தார். அப்போது அந்த சிறுமி அது என் நகை அதை நான் என் நாட்டின் விடுதலைக்காகக் கொடுத்தேன் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டேன் என அடம்பிடித்தாள். சிறுமியின் உறுதியையும், நாட்டுப்பற்றையும் கண்டு வியந்த நேதாஜி அவரை இந்திய இராணுவத்தின் உளவுப் பிரிவில் சேர்த்துக்கொள்ள அழைப்புவிடுத்தார். தன் 16 வயதில் இந்தியாவின் இளம் உளவாளியாக தன் சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினார் சரஸ்வதி ராஜாமணி.

மணி என்ற ஆணின் பெயரில் ஆண் என்ற அடையாளத்துடனேயே தன் உளவு பணியை தொடர்ந்தார். ஒருமுறை உளவு பணிக்கு சென்றிருக்கும் போது ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் குண்டடி பட்டதுடன் தப்பித்து இந்திய இராணுவ படையை வந்து அடைந்தார். அதன்பின் அவர் இந்திய தேசிய இராணுவத்தின் முக்கிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இவர் பத்தோடு பதினொன்றாவது தியாகியாக அறிவிக்கப்பட்டார். நேதாஜி மீது இவர் கொண்டிருந்த பற்றுக்கு அளவேயில்லை. அவரின் மர்ம மரணம் பற்றிப் பல ஆண்டுகள் போராட்டம் நடத்தினார். மிகப்பெரிய செல்வந்தரின் மகளான இவருக்கு இறுதியில் கிடைத்தது தியாகிகளின் பென்ஷன் மட்டும்தான். தான் சேர்த்து வைத்திருந்த பென்ஷன் பணத்தையும் சென்னையில் சுனாமி தாக்கியபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாய் கொடுத்துவிட்டார். 2005 ஆம் ஆண்டு செய்தித்தாள் ஒன்று இவர் சென்னையில் வாழ்ந்து வருவதாகவும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் இவருக்கு ரூபாய் 5 இலட்சமும் ஒரு வீடும் அளித்தார். அந்த வீட்டில்தான் சரஸ்வதி ராஜாமணி அவர்கள் தன் இறுதிகாலங்களைக் கழித்தார்.

தன் உயிர் பிரியும் காலம் வரையிலும் மக்கள் போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். தன் வாழ்க்கையின் இறுதிநாள் வரை மக்களுக்கான போராட்டங்களிலேயே கழித்த அம்மா ஜனவரி 13, 2018 அன்று உயிர்நீத்தார். அவரின் மறைவிற்கு 50 பேர் கூட வராததுதான் மிகப்பெரிய கொடுமை. உண்மையான தியாகிகள் பலரும் வரலாற்றுப் படிக்கட்டில் ஏறாமலே சென்றுவிட்டார்கள். வீரத்தாய் சரஸ்வதி ராஜாமணி போல எண்ணற்ற தியாக சுடர்கள் வழங்கிய வெளிச்சம்தான் இப்போது நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம். சுடர்கள் அணையலாம் ஆனால் அவர்கள் அந்த ஒளி அணையாது. இவரைப் போன்ற தியாகிகளை முடிந்தளவு அடையாளம் காண முயலுங்கள் நம்மைச் சுற்றி இன்னும் எத்தனையோ சுடர்கள் ஒளிமங்கி இருக்கின்றன அவற்றைப் பாதுகாப்பது நமது கடமை மட்டுமல்ல அது நாம் அவர்களுக்குச் செலுத்தவேண்டிய நன்றிக்கடன்

Ref :- Bold sky  (Tamil) – Saran Raj & Chennai memes

பின்னூட்டமொன்றை இடுக