பார்பான் யார் ? – 1

( Padmanabhan pudukkottai )

தி.க.வின் ஆசான் ஈ.வே.ரா, தமிழனுக்கு (ஈ.வே.ரா-வின் தமிழனுக்கு) நன்மை தரும் இலக்கியம் எதுவும் தமிழில் இல்லை என்றும், தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்தும் ஆரியச் சார்புடையவை என்றும் கூறி தொல்காப்பியம் முதல் எல்லாத்தமிழ் இலக்கியங்களையும் புறந்தள்ளிவிட்டார். .இதற்கு முக்கியக்காரணம் என்னவெனில் ஈ.வே.ரா-வின் கொள்கைகளின் அடிநாதமான பார்ப்பன எதிர்ப்புக்குjத் தமிழ்ச்சங்க இலக்கியங்களில் அணுவளவும் இடமில்லாமல் இருப்பதுதான் காரணம். சமூகச்சீர் கேடுகளுக்குக் கெல்லாம் காரணம் பார்ப்பான்தான் என்று எந்தப் பார்ப்பனர்களை ஈ.வே.ரா விமர்சித்தாரோ அந்தப் பார்ப்பனர்கள் தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துப் போற்றப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஈ.வே.ரா தலைமுழுகியதற்குக் காரணம் இதுதான். இன்றுள்ள அவரது வாரிசுகள் ”ஐயோ!நம் தலைவர் எல்லாவற்றையும் தலைமுழுகிவிட்டாரே என்ன செய்வது? நமக்கென்று சொல்லிக்கொள்ள வேறு என்ன இலக்கியம் இருக்கிறது?”என்று மனதளவில் கலக்கமடைந்து “எங்கள் தந்தை அதற்காகத்தான் இப்படிச்சொன்னார்: இதற்காகத்தான் அப்படிச் சொன்னார்: அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை: இந்த அர்த்தத்தில் சொல்லவில்லை”என்றெல்லாம் நொண்டிச் சமாதானங்கள் கூறி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய தங்கள் தலைவரின் கருத்துக்கு வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன வியாக்கியானம் செய்தாலும் இவர்களின் தலைவர் கூறிய கருத்துக்கள் இல்லை என்று ஆகிவிடாது.

இந்தச் சூழலில்தான் ஈ.வே.ரா-வின் வாரிசுகள் சங்க இலக்கியங்களை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் சங்க இலக்கியங்களில் வரும் சொற்களுக்கும் செய்திகளுக்கும் இவர்களது சாயத்தைப் பூசி மரபுக்கு முரணாகப் பொருள் கொண்டு தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்.  பண்டைத் தமிழகத்தில் பார்ப்பனர்கள் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டார்கள் என்ற செய்தி சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ள இயலாத இந்தப் “பகுத்தறிவு” வட்டாரத்தமிழ் “அறிஞர்கள்”  சங்க இலக்கியங்களில் வரும் அந்தணன், பார்ப்பனன் முதலிய சொற்களெல்லாம் ப்ராஹ்மணர்களைக் குறிக்காது என்றும் ப்ராஹ்மணர்கள் சங்க காலத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படவில்லை என்றும் தங்களின் “ஆய்வுக் கருத்துக்களைச் சொல்லி,  ப்ராஹ்மணர்களைக் கண்டு பற்றி எரிந்து கொண்டிருக்கும் தங்கள் வயிறுகளைக் குளிரச் செய்து கொண்டிருக்கிறார்கள். தி.க.வில் இல்லாமல் தங்களை ஆன்மிக வாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சில தமிழ் இலக்கிய ஆய்வாளர்களும் பார்ப்பன வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.அவர்களும்  இக்கருத்தையே  ஏற்கிறார்கள்.

”புலவர்”,”பேராசிரியர்”,”முனைவர்” முதலிய  பட்டங்களைப் பெற்றுவிட்டால் ஏதோ தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் இவர்களே குத்தகைக்கு எடுத்துவிட்டது போலவும்,இவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் முடிவான கருத்து என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். . நடுநிலையோடு ஆய்வு செய்யும் ஒரு இலக்கியத் திறனாய்வாளர் இவர்கள் கருத்துக்கு முரணான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் உடனே இவர்கள் அந்த ஆய்வாளருக்கு “பார்ப்பன அடிவருடி” “தமிழின துரோகி”என்ற பட்டத்தைச் சூட்டிவிடுவார்கள். நடுநிலையோடு ஆய்வுசெய்யும்   ஒருவருக்கு   இம்மாதிரியான பட்டங்களை    இவர்கள்    சூட்டினால்   தற்சார்புக் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு நடுநிலையின்றி ஆய்வு செய்து ஆதாரமற்ற கருத்துக்களை இவர்கள் கூறும்போது, இவர்களது கருத்துக்களை நாம் “பார்ப்பன விரோதிகளின் கருத்து” என்றும் “சங்கத்தமிழின துரோகிகளின் கருத்து” என்று சொல்வதுதானே ஞாயமாக இருக்கமுடியும்?.

தற்காலத்தில் “பகுத்தறிவுத் தமிழ்” வட்டாரத்தில் தி.க.வைச்சேர்ந்த சு.ப.வீரபாண்டியனார் என்ற “பெரும்புலவர்” பிரபலமானவர். இவர்தான் இப்படிப்பட்ட குதர்க்க ஆராய்ச்சிகள் செய்வதில் வல்லவர். “பார்ப்பான்”என்ற சொல் எந்த வேலை பார்ப்பவனையும் குறிக்குமாம். ஐயர், அந்தணர் என்ற சொற்களெல்லாம் பிராமண சமூகத்தைக் குறிக்கும் சொற்களாகச் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் படவில்லையாம். பிராமணர்கள் சங்ககாலத்தில் உயர்வாகக் கருதப்பட வில்லையாம். சொல்கிறார் இந்த அதிமேதாவி.  இவருடைய கருத்துக்கள் பிராம்மண எதிர்ப்பு என்ற ஒரே  கொள்கையை உள்ளீடாகக் கொண்டிருக்கின்றனவே யொழிய உண்மையை பிரதிபலிக்கவில்லை. இவருடைய கருத்துக்களுக்கு சங்க இலக்கியங்களில் எந்தச் சான்றும் இல்லை.

சங்க இலக்கியங்களில் வரும் பார்ப்பான்,  அந்தணன், மறையோன், இருபிறப்பாளன் என்ற சொற்களெல்லாம் ப்ராஹ்மணர்களைக் குறிக்கும் ஒரு பொருட்சொற்களே. ”ரிஷி”என்ற சொல்லின் தமிழ் வடிவமே “பார்ப்பான்” என்பது. ப்ராஹ்மணர்களான ஸப்தரிஷிகளின் கோத்ரங்களில் உதித்தவர்கள்தான் ப்ராஹ்மணர்கள். அதனால்தான் அவர்களுக்குத் தமிழில் பார்ப்பான் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. “பார்ப்பு” என்ற சொல்லின் அடிப்படையில் இருபிறப்பாளர்களான பிராமணர்களுக்கு அப்பெயர் கொடுக்கப்பட்டது  என்றும் கொள்ளல்  தகும். ”  பிராமணன் ” ”என்பதன் தமிழ் வடிவமே “அந்தணன்” என்பது. அதாவது “ப்ரஹ்மத்தைச் சொல்லும் வேதத்தோடு தொடர்புடையவன்” என்ற பொருளில் ப்ராஹ்மணன் என்ற சொல் வந்தது.வேதத்தின் அந்தத்தில் சொல்லப்படுவது ப்ரஹ்மம் என்பதால் அதோடு தொடர்புடையவன் என்ற பொருளில் “அந்தணன்” என்று தமிழில் வந்தது. ஆகவே இரண்டுக்கும் பொருள் ஒன்றே. ”மறையோன்” என்பது வேதத்தோடு தொடர்புடையவன் என்ற பொருளில் ப்ராஹ்மணரைக் குறிக்கும் சொல்தான். வேத தத்துக்கு வடமொழியில் “சந்தஸ்”என்ற ஒரு பெயர் உண்டு. சந்தஸ் என்றால் மறைப்பது என்று பொருள். அதாவது அறிவிலிக்கு வேதம் தன் உண்மை உருவை மறைத்துவிடும் என்ற அடிப்படையில் அச்சொல்லால் வேதம் அழைக்கப்படுகிறது. அச்சொல்லின் தமிழ் வடிவம்தான் “மறை” என்பது. “த்விஜன்”என்பதன் தமிழ் வடிவம்தான் “இருபிறப்பாளன்” என்பது.

வேதத்துடனான தொடர்பு ப்ராஹ்மணர்களுக்கு மட்டுமல்லாது அரசருக்கும் வணிகருக்கும் உண்டு என்றாலும் அவ்விரு வகுப்பினரையும் இப்பெயர்களால் அழைக்கும் வழக்கம் இருந்ததில்லை. ஏனெனில் ப்ராஹ்மணர்களுக்கு இருப்பதுபோல் வேதத்துடனான முழுமையான தொடர்பு அவ்விரு வகுப்பினருக்கும் இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்காத வெறும் காரணப்பெயர்கள் தான் இவை என்று கொண்டால் வேதத்தோடு தொடர்புடைய அரசர் வணிகர் இவர்களைக்குறித்தும் பார்ப்பான் முதலிய சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சங்க இலக்கியங்களில் மேற்படி சொற்கள் அரசர்களைக் குறித்தோ வணிகர்களைக் குறித்தோ பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. “பார்ப்பான் என்றால் எந்த வேலை பார்ப்பவனையும் குறிக்கலாம்” என்ற சுபவீரபாண்டியனாரின் கடைகழிந்த ஆய்வுக்கருத்துக்கும் சங்க இலக்கியங்களில் இடம் இல்லை. ஒரு சலவைத் தொழிலாளியையோ, ஒருமண்பானை செய்பவனையோ, ஒரு கொல்லனையோ, ஒரு தச்சனையோ, ஒரு பிணம் சுடுபவனையோ குறித்துப் பார்ப்பான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக ஒரு இடத்தையாவது சங்க  இலக்கியங்களிலிருந்து  இவரால்  காட்ட முடியுமா? வெறுப்பு என்று வந்துவிட்டால் எதை வேண்டுமானாலும் ஆய்வு என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி உளறுவதுதான் இவர்களின் வேலை. சங்க இலக்கியங்களில் பார்ப்பன சமூகம் சிறப்பித்துச் சொல்லப்படுவதை ஜீரணிக்க முடியாமல்தான் ‘பார்ப்பான்’ என்ற சொல்லைக் காரணப் பெயர்ச் சொல்லாகப் பொருள்கொண்டு “அச்சொல் ஒரு சமூகத்தைமட்டும் குறிக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்றவர்களையும் குறிக்கலாம்” என்று சொல்லுமளவிற்கு இவர்களது “ஆய்வு”போய்விட்டது.

உலகில் வழங்கப்படும் சொற்கள் எல்லாமே ஒரு காரணத்தால் உருவானவைதான். அச்சொற்களை யௌகிகம், ரூடி என்று பிரிப்பது உண்டு. ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட நபரையோ வஸ்துவையோ குறிக்கும் சொல் என்றால் அதை ரூடி என்பார்கள்.அதே சொல்லைக்  காரணப்பெயர்ச் சொல்லாகக் கொண்டு மற்றவற்றையும் குறித்துப் பயன்படுத்தினால் அதை யௌகிகம் என்பார்கள். உதாரணமாக ‘கண்ணன்’ என்ற சொல் கண்ணழகு உள்ள ஆண்கள் எல்லோரையும் குறிக்கும்.கண்ணழகுள்ள எல்லோரையும் குறிக்கும் பட்சத்தில் அச்சொல் யௌகிகம் எனப்படுகிறது. புல்லாங்குழலைக் கையில் பிடித்த பிரசித்தி பெற்ற கண்ணனை அது குறிக்கும் பட்சத்தில் அச்சொல் ரூடி என்று சொல்லப்படுகிறது.  ஒரு சொல் ரூடியா யௌகிகமா என்பதை அது பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்துத்தான் முடிவு செய்யமுடியும். சங்க இலக்கியங்களில் பார்ப்பான், அந்தணன், மறையோன், முதலிய சொற்கள் எல்லாம் ஒருகுறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் ரூடிச் சொற்களாகவே பயன்படுத்தப் பட்டுள்ளனவே யொழிய மற்ற சமூகத்தினரையும் குறிக்கும் யௌகிகப்பொருளில் எவ்விடத்திலும் அச்சொற்கள் பயன்படுத்தப் படவில்லை.

அதனால் பிராஹ்மணன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவங்கள்தான் பார்ப்பான், மறையோர்,  அந்தணன்,  இருபிறப்பாளர் என்ற சொற்கள் எல்லாம். எப்படி விஷ்ணுவுக்குத் தமிழில் மாயோன், திருமால், துழாயோன் என்று சொல்லப்படுகிறதோ அதைப் போல ப்ராஹ்மணன் என்பதற்குரிய தமிழ்ச் சொற்கள்தான் பார்ப்பான் முதலிய சொற்கள். ஒரு பொருளைக் குறிக்கும் ஒரு சொல்லுக்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு சொற்கள் இருக்கும். சொற்கள்தான் வேறுபடுமே யொழிய பொருள் ஒன்றாகத்தான் இருக்கும். உதாரணமாகப் பாம்புக்கு ஆங்கிலத்தில் snake என்பார்கள். அதனால் பாம்பு என்பது வேறு snake என்பது வேறு இரண்டும் ஒன்றல்ல என்று ஒருவன் கூறினால் அது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ அவ்வளவு முட்டாள்தனமான கருத்துத்தான் வடமொழியில் சொல்லப்படும் ப்ராஹ்மணன் என்பது வேறு தமிழில் உள்ள பார்ப்பான் என்பது வேறு என்று இவர்கள் சொல்கின்ற கருத்தும்.-

மேலும் இந்தக் குதர்க்க அராய்ச்சியாளர்கள் “சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் பார்ப்பான் என்பது வேறு.  அந்தணன் என்பது வேறு. இருவரும் ஒருவர் அல்லர்” என்றும் “ஐயர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காது” என்றும்  “பார்ப்பான் என்பது ஒரு கௌரவம் மிக்க வார்த்தையாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை” என்றும் கூறுகிறார்கள் முதலில் பார்ப்பான், அந்தணன், ஐயர் இந்த மூன்று சொற்களும் ஒருவரையே குறிக்கும் என்பதை தக்க ஆதாரத்தோடு நிறுவிவிட்டு அடுத்த விஷயத்துக்குச்செல்வோம்.

தொல்காப்பியத்தில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல்-பொ-75) என்று ஆறு தொழில்கள் பார்ப்பாருக்குரியவை என்று சொல்லப்படுகிறது.  அதனால் பார்ப்பாரே அறுதொழிலோர் என்பது தெளிவாகிறது. அந்த ஆறு தொழில்கள் எவை என்பதைச் சங்க இலக்கியம் “ஓதல், வேட்டல், அவை பிறர்ச்செய்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர்”(பதிற்றுப்பத்து-24) என்று சங்க இலக்கியம் தெளிவாக்குகிறது. இந்த சங்க இலக்கியவரியில் “அந்தணர்” என்று வந்துள்ளது கவனிக்கத்தக்கது. அதனால் தொல்காப்பியத்தில் சொல்லப்படும் பார்ப்பான்தான் இந்த சங்க இலக்கிய வரியில் சொல்லப்படும் அறு தொழில் அந்தணன் என்பது தெளிவாகிறது. அறு தொழில் அந்தணர் என்ற சொற்றொடர் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காணப்படுகிறது. அந்தணர்க்குரிய ஆறுதொழில்களில் “ஏற்றல்” என்று சொல்லப்படும் தானம் வாங்குதல் என்பது ஒன்று. இது அந்தணர்க்கு மட்டுமே உரியது. அந்தணர்களைத் தவிர மற்றவர்கள் தானம் வாங்கக் கூடாது. அந்தணர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தானம் கொடுக்கவும் கூடாது.

”ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்”  என்ற சங்க கால மன்னன் ஒருவன் அந்தணருக்கு தானம் கொடுத்த விஷயம் “….பார்ப்பார்க்குக் கபிலையொடு குடநாட்டோரூரீத்து” என்று பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரியில் “பார்ப்பார்” என்ற சொல்லால் அந்தணர்கள் குறிப்பிடப்படுவது குறிப்பிடத்தக்கது. புறநாநூறு 367-ஆம் பாடலில் “ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச்சொரிந்து வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்காலைப் புணை பிறிதிலையே” என்று அந்தணருக்கு தானம் வழங்குவதால் ஏற்படும் பயன் சொல்லப்படுகிறது. இவ்வரியிலும் “பார்ப்பார்” என்று வந்துள்ளது காண்க. பதிற்றுப்பத்து (74 காம்) பாடலில், “உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் அருங்கலமேற்ப நீர்பட்டு” என்று வேள்வி செய்த அந்தணர்களுக்கு அரசன் தானம் வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் கட்டுரைக் காதையில் வரும் வலசைப் பார்ப்பான் பாராசரன் பற்றிய குறிப்பும் நடுநற்காதையில் “நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்” என்று அந்தணன் மன்னனை வேள்வி செய்ய அறிவுறுத்திய செய்தியும், அறுதொழில் அந்தணரையே பார்ப்பார் என்ற சொல்லால் பண்டைத்தமிழர் குறிப்பிட்டனர்.என்பதைத் மிகத்தெளிவாகக் காட்டுகின்றன. குறுந்தொகை -156-ஆம் பாடல் பார்ப்பன மகனே! என்று ஆரம்பிக்கிறது. அப்பாடலில் “எழுதாக் கற்பின் நின் சொல்.” என்ற சொற்றொடர் பார்ப்பான் வேதம் கற்பவன் என்பதைக்காட்டுகிறது.

ஐங்குறு நூறு நான்காம் பாடலில் புலவர் மன்னனை வாழ்த்தும்போது “பார்ப்பார் ஓதுக!” என்று சொல்கிறார். அதாவது “உனது நாட்டில் அந்தணர்கள் வேதங்களை விடாது ஓதட்டும்” என்று வாழ்த்துகிறார் புலவர். புறநானூற்றில் ‘பார்ப்பன வாகை’ என்ற ஒரு துறையே உள்ளது. “கேட்கக் கடவன கேட்டு தலைமை பெற்ற அந்தணனை யாகத்தால் வெற்றியைப் பெருக்குதல்”என்று புறப்பொருள் வெண்பாமாலை இத்துறையை விளக்குகிறது. புறநாநூறு 166-ஆம்பாடல் பார்ப்பன வாகையைச்சேர்ந்தது. அப்பாடலில் அந்தணர்கள் செய்யும் வேள்வி பற்றிய குறிப்பே வருகிறது.

”மறப்பினும் ஓத்துக் கொளலாகும்” என்ற குறளால் அறுதொழில்களில் வேதம் ஓதும் தொழில் பார்ப்பானுக்கே என்பது பெறப்படுகிறது. அறு தொழில் செய்யும் அந்தணரையே அறுதொழிலோர் என்று குறிப்பிட்டு அந்தணன் என்பதும் பார்ப்பான் என்பதும் ஒன்றுதான் என்று திருக்குறள் கூறிவிட்டது. மேலும் திரிகடுகம் 70-ஆவது பாடலில்  “நாவினால் வேதம் கரைகண்ட பார்ப்பானும்” என்று வேதத்தில் சிறந்த பாண்டித்யம் உள்ளவர்கள் பார்ப்பனர்கள் என்று சொல்லப்பட்டது

திரிகடுகம்-34-ஆவது பாடலில் “மூன்று கடன் கழித்த பார்ப்பானும்”என்று சொல்லியிருப்பது வேதத்தில் அந்தணர்களுக்குச் சொல்லிய தேவர் கடன், பித்ரு கடன். ரிஷி கடன் என்ற மூன்று கடன்களைக் குறிக்கிறது.  இப்படி வேதம் ஓதுதல்.ஆறு தொழில்கள். வேள்வி செய்தல் தானம் வாங்குதல் இவற்றைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் பார்ப்பான், அந்தணன் என்ற இருசொற்களுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  இதுபோல் இன்னும் ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம். ஆகவே பார்ப்பான் வேறு அந்தணர் வேறு என்று இவர்கள் கூறுவது ஆதாரமற்ற அபத்தக்கருத்தாகும்.  “பார்ப்பார்” என்ற சொல் அந்தணர்களைத் தவிர மற்ற எந்த சமூகத்தினரைக் குறித்தும் சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. ஆகவே தி.க “புலவர்” சுபவீயாரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்பதுடன் வெறுப்புணர்வால் எழுந்த ஈனத்தனமான கருத்தும் ஆகும். மேலும் ஐயர்’ என்றால் அந்தணரைக்குறிக்காது என்கிறார் இந்தப் “பெரும்புலவர்”. கலித்தொகை -130-ஆம் பாடலில் வரும் ”இம்மாலை ஐயர் அவிர் அழல் எடுப்ப” என்ற வரி மாலை வேளையில் அந்தணர்கள் வேள்வி செய்த விஷயத்தைக் கூறுகிறது. இவ்வரியில் வரும் “ஐயர்” என்ற சொல் அந்தணரையே குறிக்கும் என்பது எல்லோர்க்கும் விளங்கும்.

ஆகவே சங்க இலக்கியத்தின்படி ஐயர், பார்ப்பான் ,அந்தணன் எல்லாம் ஒன்றுதான். இவர்களின் குதர்க்க  விளக்கங்களுக் கெல்லாம்  சங்க இலக்கியங்களில்  எவ்விதமான  ஆதாரமும் இல்லை. மேலும் “தமிழ்நாட்டு அந்தணர் வேறு வடநாட்டு பிராமணர் வேறு”  என்றும் சில அபத்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.  இவர்களின் கூற்றுக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. உலகம் முழுக்க சனாதன நெறியே ஒருகாலத்தில் பின்பற்றப்பட்டது .நமது பாரத நாட்டிலும் இமயம் முதல் குமரிவரை சனாதன நெறியே நிலவியது.  நம்  நாட்டில் பல மொழிகள் பேசப்படும் பகுதிகள் பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றன. ஆனால் எப்பகுதியில் எம்மொழி பேசப்பட்டாலும் நாடு முழுவதும் வேத வைதிக நெறிகள் மட்டும் ஒரே மாதிரியாகத்தான்  எல்லா இடங்களிலும் இருந்து வந்திருக்கின்றன .தமிழ்நாட்டில் உள்ள அந்தணர் தமிழ் பேசுவார்கள். நாட்டின் வேறு பகுதிகளில் இருப்பவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவார்கள்.ஆனால் வேதம், வைதிக நெறிகள் வேள்வி என்பதெல்லாம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கும்   மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் ஒரேமாதிரியாகத்தான் அன்று முதல் இன்றுவரை இருக்கின்றன.

தமிழ் நாட்டில் வாழும் அந்தணனின் பேச்சுமொழி தமிழாக இருக்கலாம். ஆனால் வேதம் எந்த மொழியில் உள்ளதோ அந்த மொழியில்தான் வேதம் ஓதினான் தமிழ்நாட்டு அந்தணன். வைதிகச் சடங்குகளையும் வைதிக வேள்விகளையும் வேதம் எம்மொழியில் உள்ளதோ அம்மொழியில்தான் நடத்தினான். பண்டைக் காலம்தொட்டே இதுதான் நடைமுறை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் அந்தணர்கள் தாங்கள் வாழும் பகுதிக்குத்தகுந்த நடை உடை பாவனை உருவம் இவற்றில் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் ஒரே வேதம் தான். ஒரே வைதிக நெறிதான். ஒரே வேள்விமுறைதான்.  அக்காலம் முதல் இக்காலம் வரை வடநாட்டில் உள்ள அந்தணன் எந்த வேதத்தை ஓதுகிறானோ அதே வேதத்தைத்தான் தமிழ் நாட்டில் உள்ள அந்தணனும் ஓதுகிறான்.

நம் பாரத நாட்டில் எந்தப்பகுதியில் வாழும் அந்தணர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லோருமே சப்த ரிஷிகளின் கோத்ர வழியில் வந்தவர்கள்தான். சங்க இலக்கியங்களில் சில கோத்ர ரிஷிகளின் பெயர்களும் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. புறநாநூறு 2-ஆம் பாடலில் உள்ள “அந்தி அந்தணர் அருங்கடனிறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் பொற்கோட்டிமயமும்”என்ற வரி இமய மலையில் வாழும் அந்தணரும் வேள்வி செய்தனர் என்று செய்தியைக் குறிப்பிடுகிறது.

சிலப்பதிகாரமும் வஞ்சிக்காண்டம்-காட்சிக்காதையில் “புன் மயிர்ச்சடைமுடி புலரா உடுக்கை முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து இருபிறப்பாளரொடு பெருமலை அரசன்” என்று வேள்வி செய்யும் அந்தணர்கள் இமயமலையில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது.  இமயமலை வடநாட்டில் உள்ளது.அதற்காக அங்கு வாழும் அந்தணர்களுக்கு வேறு அடையாளத்தைச் சங்க இலக்கியம் காட்டவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அந்தணர்களை எந்த அடையாளத்தோடு குறிப்பிடுகிறதோ அதே அடையாளத்தோடுதான் இமயத்தில் வாழும் அந்தணர்களையும் குறிப்பிடுகிறது சங்க இலக்கியம். இமயத்தில் வாழும் அந்தணர்களையும் இருபிறப்பாளர், அந்தணர் என்றே சங்க இலக்கியம் அழைக்கிறது. வடபுலம் வாழ்பவர்கள் என்பதற்காக வேறு பெயர்களால் அவர்களைக் குறிப்பிடவில்லை. அந்த அடிப்படையில் இமயம் முதல் குமரிவரை நாடுமுழுவதும் பரவியிருந்த ப்ராஹ்மணர்கள் எல்லோருமே சப்த ரிஷிகளின் கோத்ர வரிசையில் வந்த ஒரே வகுப்பினர்தான். ப்ராஹ்மணன் என்ற வடமொழிச்சொல்லின் தமிழ் வடிவமே பார்ப்பான், அந்தணன் என்பதெல்லாம். அதனால் தமிழ்நாட்டில் உள்ள அந்தணர்கள் வேறு. தமிழ்நாட்டு அந்தணர்களுக்கு வேதம் வேறு வேள்வி முறை எல்லாம் வேறு என்று சிலர் சொல்வதெல்லாம் ஆதாரமற்ற வெறும் பிதற்றல்கள்தான்.-

தொடரும் ………..

பின்னூட்டமொன்றை இடுக